×

நாகூரில் தண்ணீர் பஞ்சத்தை போக்க 100 ஆண்டு பழமையான கிணறு தூர்வாரப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

நாகப்பட்டினம், செப்.26: நாகூரில் தண்ணீர் பஞ்சத்தை போக்க 100 ஆண்டு பழமை வாய்ந்த கிணற்றை தூர்வாரி சீர்செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். நாகூர் பெரியார் தெருவில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிணறு உள்ளது. இந்த கிணற்றில் இருந்து தண்ணீரை இறைத்து நாகூர் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். எவ்வளவு தண்ணீர் இறைத்தாலும் வறண்டு போகாமல் அமுதசுரபி போல் தண்ணீரை கொடுத்து கொண்டே இருக்கும். இவ்வாறு நாகூர் பொதுமக்களின் குடிநீர் பஞ்சத்தை போக்கி வந்த இந்த கிணறு முறையாக பராமரிப்பு செய்யாமல் விடப்பட்டது.

இதனால் அந்த கிணறு பழுதடைந்து தண்ணீர்களும் பாசிபிடித்தது. நாகூரை சுற்றி வசிப்பவர்கள் தங்களது வீடுகளில் போர்வெல் போட்டதால் பல ஆண்டுகாலமாக தண்ணீர் பஞ்சத்தை போக்கிய கிணற்றை மறந்து விட்டனர். இதற்கு பதிலாக கிணற்றின் உள்ளே பாட்டில்கள் மற்றும் குப்பை கழிவுகளை கொட்ட தொடங்கினர். தற்போது நாகூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் தொடங்கியுள்ளது. இதை போக்க இது போன்ற பொதுவான கிணறுகளை பராமரிப்பு செய்ய வேண்டும் என அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: நாகூர் பெரியார் தெருவில் இருந்த கிணற்றில் இருந்து தண்ணீரை எடுத்து புதுத்தெரு, வள்ளியம்மை நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தோம். தினந்தோறும் குடம் குடமாக தண்ணீர் எடுத்து செல்வோம். வீடுகளில் போர்வெல் போட்ட பின்னர் இந்த கிணற்றின் பெருமையை மறந்து விட்டோம். இதனால் கடந்த சில ஆண்டு காலமாக இந்த கிணறு பாழடைந்து கிடக்கிறது. கிணற்றின் உள்ளே குப்பை கழிவுகள் கொட்டுப்பட்டு இன்று கொசுக்கள் உற்பத்தி ஆகும் இடமாக மாறிவிட்டது. கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த காலங்களில் இது போன்ற கிணறுகள் இருந்தால் குடிநீர் பஞ்சம் ஏற்படாது. எனவே கிணற்றின் மேல் பகுதியில் உடைந்து காணப்படும் கம்பிகளை அகற்றி தூர்வார வேண்டும்.

இந்த கிணற்றின் நீர் ஊற்று இன்னும் இருக்கிறது. எனவே அதை சரி செய்து எதிர்காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் சரி செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

The post நாகூரில் தண்ணீர் பஞ்சத்தை போக்க 100 ஆண்டு பழமையான கிணறு தூர்வாரப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Nagor ,Nagapattinam ,Nagore ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி...