×

கரை ஒதுங்கிய 50 விநாயகர் சிலைகள்; மீண்டும் கரைக்க ஏற்பாடு: மெரினா, பட்டினப்பாக்கம் கடற்கரையில் குவிந்த 90 டன் குப்பை அகற்றம்: மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு

சென்னை: சென்னை மெரினா, பட்டினப்பாக்கம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரையாமல் கரை ஒதுங்கி கிடக்கும் நிலையில், அதை அகற்றுவது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 17ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு சென்னையில் பல்வேறு இடங்களில் பிரமாண்ட சிலைகள் வைத்து பூஜை செய்யப்பட்டன. சென்னை மாநகர எல்லைக்குள் 1,510 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தது. இந்த விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டது. அதன் பின்னர், விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் காவல்துறை அனுமதி வழங்கியது.

சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், காசிமேடு, எண்ணூர், திருவொற்றியூர், நீலாங்கரை அருகே உள்ள பாலவாக்கம் பல்கலை நகர் ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகள் கரைப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, அடையாறு, தி.நகர், பரங்கிமலை, பூக்கடை, வண்ணாரப்பேட்டை உள்பட பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த சிலைகள் அனைத்தும் சென்னை பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் கடற்கரையில் நேற்று முன்தினம் ஆயிரக்கணக்கான சிலைகள் கரைக்கப்பட்டன.
கரையாத சிலைகளை அகற்றுவது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பட்டினப்பாக்கம் கடற்கரையில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் கரையாத சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

ஆய்வை தொடர்ந்து ஆணையர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:
சென்னையில் கடந்த 2 நாட்களாக 1,400க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டது. சுமார் 50 சிலைகள் வரை கரை ஒதுங்கியுள்ளது. பெரிய சிலைகள், கடலில் மூழ்கவில்லை. அவற்றை திரும்பவும் கிரேன் மூலம் கரைப்பதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம். இரவு, பகல் பாராமல் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். தேவைப்பட்டால் கிரேன் ஏற்பாடு செய்து தருவதாகவும் சென்னை போலீஸ் கமிஷனர் உறுதியளித்துள்ளார்.

மேலும், சிலைகளில் இருந்த அலங்கார பொருட்களால் குவிந்துள்ள குப்பைகளை அகற்றவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். ஏற்கனவே 40 டன் அளவுக்கு குப்பைகளை அகற்றி உள்ளோம். இதுவரை 70 டன் அகற்றப்பட்டது. 140க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். தாழ்வான அலைகளாக வருகிறது. உயரமாக வரும் போது சின்ன சிலைகள் அனைத்தும் தானாக போய்விடும். மீனவர்கள், தன்னார்வலர்களும் உடனிருக்கிறார்கள். சில சிலைகள் வெளியே வந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இப்படி சில சிலைகள் கரைக்கு வருவது வழக்கமான ஒன்று தான். குறிப்பாக பெரிய சிலைகள் 20 உள்ளன. காவல் துறையினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். கழிவுகளை மட்டும் தான் சென்னை மாநகராட்சி அகற்றும். கரைக்க வேண்டிய சிலைகளை கடலில் திரும்பவும் கரைக்க ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post கரை ஒதுங்கிய 50 விநாயகர் சிலைகள்; மீண்டும் கரைக்க ஏற்பாடு: மெரினா, பட்டினப்பாக்கம் கடற்கரையில் குவிந்த 90 டன் குப்பை அகற்றம்: மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Ganesha ,Marina, Pattinpakkam beach ,Municipal Commissioner ,Radhakrishnan ,Chennai ,Chennai Marina, Pattinappakkam ,
× RELATED திருவேற்காடு நகராட்சியில் தூய்மை...