×

கஞ்சா கடத்திய வழக்கில் 2 பேருக்கு 5 ஆண்டு சிறை: சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: கஞ்சா கடத்திய 2 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து, சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருவல்லிக்கேணி நாராயண கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த சண்முகம் (31), திருவொற்றியூர் சண்முகபுரத்தை சேர்ந்தவர் சரவணன் (34) ஆகியோர், கடந்த 2020ம் ஆண்டு மொபட்டில், ராஜாஜிநகர் பகுதியில் கஞ்சா கடத்தி சென்ற போது சாத்தன்காடு போலீசார் அவர்களை கைது செய்தனர்.

விசாரணையில், ஊத்துக்கோட்டை காவாங்கரையை சேர்ந்த சிவா (42) என்பவர்தான் கஞ்சாவை சப்ளை செய்தார் என்று அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, சிவாவை கைது ெசய்த போலீசார் 3 பேர் மீதும் போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தனர். சண்முகத்திடம் இருந்து 3.6 கிலோ கஞ்சாவும், சரவணனிடம் இருந்து 5.4 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை போதைப்பொருள் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சி.திருமகள் முன்பு விசாரணைக்கு வந்தது. போலீசார் தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் கே.ஜே.சரவணன் ஆஜராகி வாதிட்டார்.

குற்றம்சாட்டப்பட்ட சிவா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.எஸ்.சீனிவாசன், சிவாவிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்படவில்லை. அவர் மற்ற இருவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் கைது செய்யப்பட்டுள்ளார். கைது நேரத்தில் அவர் சிறையில் இருந்தார் என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் சண்முகம், சரவணன் ஆகியோருக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனையும் தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. சிவா மீதா குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அவர் விடுதலை செய்யப்படுகிறார் என்று தீர்ப்பளித்தார்.

The post கஞ்சா கடத்திய வழக்கில் 2 பேருக்கு 5 ஆண்டு சிறை: சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Special Court ,Chennai ,Thiruvallykeeni Narayana ,
× RELATED எல்.எஸ்.டி எனும் ஸ்டாம்ப் வடிவிலான...