×

குஜராத்தில் மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்தது: டிப்பர் லாரி, பைக்குகள் ஆற்றில் கவிழ்ந்தன

சுரேந்திரநகர்: குஜராத்தில் மேலும் ஒரு ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் டிப்பர் லாரி, பைக்குகள் ஆற்றில் கவிழ்ந்து 4 பேர் படுகாயம் அடைந்தனர். குஜராத் மாநிலத்தில் கடந்த ஆண்டு மோர்பி ஆற்றுப்பாலம் சரிந்ததில் 145 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் அப்போது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் தற்போது மீண்டும் ஒரு ஆற்றுப்பாலம் சரிந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டம் வாத்வான் நகர் பகுதியில் போகாவோ ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றின் குறுக்கே ஒரு பாலம் கட்டப்பட்டுள்ளது.

இந்த பாலம் மிகவும் பழமையான பாலம் என்று கூறப்படுகிறது. இந்த பாலத்தில் நேற்று முன்தினம் மாலை 40 டன் கொண்ட டிப்பர் லாரி கடக்க முயன்றது. அப்போது ஆற்றுப்பாலம் திடீரென இடிந்து விழுந்துவிட்டது. இதனால் டிப்பர் லாரி மற்றும் அதன் பின்னால் வந்த 2 பைக்குகளும் ஆற்றில் விழுந்தன. இந்த விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

போகாவோ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் மிகவும் பழையது என்பதால், அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதையும் மீறி டிப்பர் லாரி சென்றதால் தான் விபந்து நடந்ததாக சுரேந்திரநகர் கலெக்டர் கே.சி.சம்பத் தெரிவித்தார்.

அவர் கூறுகையில்,’ இந்த பாலம் கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் பழமையானது. இதனால் கனரக வாகனங்கள் செல்வதை தடுக்கும் வகையில், எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு, பாலத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. அதை மீறி டிப்பர் பாலத்தை கடக்க முயன்றதால், பாலம் இடிந்துள்ளது’ என்று தெரிவித்தார்.

The post குஜராத்தில் மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்தது: டிப்பர் லாரி, பைக்குகள் ஆற்றில் கவிழ்ந்தன appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Surendranagar ,Dinakaran ,
× RELATED குஜராத், ராஜஸ்தானில் ரூ300 கோடி...