×

பேரூராட்சி ஊழியருக்கு கொலை மிரட்டல் 4 பேர் மீது செயல் அலுவலர் புகார்

திங்கள்சந்தை, செப். 26: திங்கள்நகர் பேரூராட்சி பணியாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, செயல் அலுவலர் இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். திங்கள்நகர் தேர்வு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் அம்புஜம், இரணியல் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: திங்கள்நகர் தேர்வு நிலை பேரூராட்சிக்கு சொந்தமான தினசரிசந்தை மற்றும் வாரச்சந்தையை கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி நடைபெற்ற பொது ஏலத்தில் திருவிதாங்கோடு எள்ளுவிளையை சேர்ந்த நாகராஜன் என்பவர் குத்தகைக்கு எடுத்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை போக்குவரத்துக்கு இடையூறாக நடைபாதையில் வைக்கப்பட்ட கடையை அகற்ற பேரூராட்சி சந்தை காவலரால் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த சந்தையில் நுழைவு கட்டணம் வசூல் செய்யும் 4 பேர், பேரூராட்சி சந்தை காவலரிடம் தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். எனவே பேரூராட்சி பணியாளரிடம் தகாத வார்த்தை கூறி, கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார். இதனிடையே பேரூராட்சி சந்தை காவலருக்கு, நுழைவு கட்டணம் வசூல் செய்யும் தனியார் ஊழியர்கள் மிரட்டல் விடுக்கும் காட்சிகளை பேரூராட்சி காவலர் தனது செல்போனில் வீடியோவாக படம் பிடித்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சம்பவம் குறித்து இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பேரூராட்சி ஊழியருக்கு கொலை மிரட்டல் 4 பேர் மீது செயல் அலுவலர் புகார் appeared first on Dinakaran.

Tags : Dingalnagar Municipal Corporation ,
× RELATED பழநி நகர் பகுதியில் சாலையோரம்...