×

அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி உண்ணாவிரதம் திட்டமிட்டபடி 28ம் தேதி நடக்கும்: இடைநிலை ஆசிரியர் சங்கங்கள் அறிவிப்பு

சென்னை: பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் தொடக்க கல்வி இயக்குநருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. எனவே, திட்டமிட்டபடி 28ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதம் நடக்கும் என்று பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்கள் இயக்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு தொடக்க கல்வித்துறையின் கீழ் செயல்படும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், 2009ம் ஆண்டு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியமாக ரூ.5,200 வழங்கப்பட்டு வருகிறது. 2009ம் ஆண்டுக்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ. 8,370 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரே பணி, ஒரே கல்வித்தகுதி இருந்தும் இரண்டு விதமான ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சமவேலைக்கு சம ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. புதிய அரசு வந்த பிறகு இரண்டு ஆண்டுக்கு பிறகு 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் போராட்டம் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 3 நபர் அடங்கிய குழு ஒன்றை அமைத்து ஊதிய முரண்பாடு குறித்து கருத்து கேட்டு அரசுக்கு அனுப்ப முதல்வர் ஆணையிட்டார். ஆனால் ஊதிய முரண்பாடு இன்னும் தீர்க்கப்படவில்லை. இதையடுத்து, மேற்கண்ட இயக்கத்தின் சார்பில் மூன்றுகட்ட போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இரண்டு கட்ட போராட்டத்துக்கு பிறகும் அரசு கண்டுகொள்ளவில்லை.

எனவே, செப்டம்பர் 28ம் தேதி முதல் காலவரையற்ற தொடர் உண்ணாவிரதம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, தொடக்க கல்வி இயக்குநர் கண்ணப்பன் ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. அதன் பேரில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று காலை 10 மணி அளவில் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து, திட்டமிட்டபடி செப்டம்பர் 28ம் தேதி காலவரையற்ற தொடர் உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ளப்படும் என்று இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தின் பொதுச் செயலாளர் ராபர்ட், தலைவர் ரெக்ஸ் ஆனந்தகுமார் ஆகியோர் அறிவித்தனர்.

The post அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி உண்ணாவிரதம் திட்டமிட்டபடி 28ம் தேதி நடக்கும்: இடைநிலை ஆசிரியர் சங்கங்கள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Secondary teachers unions ,CHENNAI ,Principal ,Education ,Elementary ,Dinakaran ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளை...