×

நல்லம்பாக்கத்தில் சேறும் சகதியுமாக மாறிய சிமென்ட் சாலை: வாகன ஓட்டிகள் கடும் அவதி; நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் வண்டலூர் அடுத்த நல்லம்பாக்கம் ஊராட்சியில், நல்லம்பாக்கம், கண்டிகை, அம்பேத்கர் நகர், காந்தி நகர், வலம்புரி நகர், மல்ரோசாபுரம், சின்ன காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட 2 கிலோ மீட்டர் கொண்ட நல்லம்பாக்கம் பிரதான சாலை கடந்த 2021ம் ஆண்டு தனி அலுவலர்களின் பதவி காலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு தார் சாலையாக அமைக்கப்பட்டது. அதில், 500 மீட்டர் மட்டும் பல லட்சம் செலவில் சிமென்ட் சாலையாக அமைக்கப்பட்டது.

இந்த சாலையில் பைக், ஆட்டோ, கார், வேன் உள்ளிட்ட வாகனங்களை தவிர கனரக வாகனங்கள் எதுவும் செல்லவில்லை. ஆனால், சிமென்ட் சாலை அமைக்கப்பட்ட சில மாதங்களிலேயே குண்டும், குழியுமாக மாறிவிட்டது. சாலையின் இரண்டு பக்கங்களிலும் கால்வாய் வசதி இல்லாததால், மழை நீருடன் கலந்த கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் சாலையிலேயே தேங்கி நிற்கிறது. இதில், மேற்படி சாலை வெயில் காலங்களில் புழுதி பறந்த சாலையாகவும், மழைக்காலங்களில் சேறும், சகதியுமாகவும் மாறிவிட்டது.

வாகனங்கள் அதிவேகமாக செல்லும்போது சாலையில் நடந்து செல்வோர் மீது மழைநீருடன் கலந்த கழிவுநீர் படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் இடையே வீண் வாக்குவாதம் ஏற்படுகிறது. இதனால், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பலமுறை புகார் கூறியும் கண்டுகொள்ளவில்லை. எனவே, இவ்விஷயத்தில் சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

The post நல்லம்பாக்கத்தில் சேறும் சகதியுமாக மாறிய சிமென்ட் சாலை: வாகன ஓட்டிகள் கடும் அவதி; நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Nallambakkam ,Kuduvancheri ,Chengalpattu District ,Katangolathur Union Vandalur ,Nallambakkam Panchayat ,Kandigai ,Ambedkar Nagar ,Gandhi Nagar ,Dinakaran ,
× RELATED வண்டலூர், கூடுவாஞ்சேரி பகுதிகளில்...