- புதுச்சேரி பாஜா
- சாமிநாதன்
- கோஷ்டி புசல்
- முதல் அமைச்சர்
- ரங்கசாமி
- புதுச்சேரி
- சாமிநாதன்
- புதுச்சேரி மாநிலப் பாஜா
- செல்வகணபதி
- கோஷ்டி பாசல் இசைக்குழு
புதுச்சேரி: புதுச்சேரி மாநில பாஜ தலைவராக இருந்த சாமிநாதன் மாற்றப்பட்டு, செல்வகணபதி எம்பியை மாநில தலைவராக பாஜ தலைமை நியமனம் செய்துள்ளது. புதுச்சேரி மாநில பாஜ தலைவராக லாஸ்பேட்டையை சேர்ந்த சாமிநாதன் கடந்த 2015 முதல் 8 ஆண்டாக செயல்பட்டு வந்தார். கட்சிக்குள் கோஷ்டி பூசல் உச்சகட்டத்தை அடைந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என கூறப்பட்டு வந்தது. சபாநாயகர் செல்வம் தலைமையில் ஒரு அணியினர் ஒருவரையும், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் மற்றொரு அணி வேறொருவரையும் தலைவர் பதவிக்கு தலைமைக்கு பரிந்துரை செய்தனர்.
மேலும் கவர்னர் தமிழிசைக்கும் ரங்கசாமிக்கு இடையே பனிப்போர் நிலவி வருகிறது. இந்நிலையில் என்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமியுடன் இணக்கமாக இருக்கும் செல்வகணபதியை தலைவராக நியமனம் செய்தால் கூட்டணியில் பிரச்னையின்றி தேர்தலை எதிர்கொள்ள முடியும் என பாஜ தலைமை கருதியது. இதையடுத்து தற்போது தலைவராக உள்ள சாமிநாதன் திடீரென நேற்று மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக தற்போது மாநிலங்களவை எம்பியாக இருக்கும் செல்வகணபதியை தலைவராக பாஜ தலைமை நியமனம் செய்துள்ளது.
இதற்கான உத்தரவை பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பிறப்பித்துள்ளார். செல்வகணபதி கல்வியாளர், ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகளுடன் நெருக்கமானவர். கம்பன் பேரவை, விநாயகர் சதுர்த்தி பேரவையில் நிர்வாகியாக செயல்பட்டவர். முதன்முறையாக பாஜ மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இதனைதொடர்ந்து புதுச்சேரி பாஜ தலைவராகி உள்ளார். மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள செல்வகணபதிக்கு, சபாநாயகர் செல்வம், எம்எல்ஏக்கள் அங்காளன், சிவசங்கரன், ராமலிங்கம், அசோக்பாபு, ஜான்குமார், ரிச்சர்ட்ஸ் ஜான்குமார் மற்றும் பாஜ நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
The post கோஷ்டி பூசல் உச்சகட்டம் அடைந்த நிலையில் புதுச்சேரி பாஜ தலைவர் சாமிநாதன் திடீர் மாற்றம்: முதல்வர் ரங்கசாமிக்கு வேண்டியவர் புதிய தலைவராக நியமனம் appeared first on Dinakaran.