×

விசாரணைக்கு வந்தவர்களின் பல்லை பிடுங்கிய விவகாரம் ஐஏஎஸ் அதிகாரி அமுதாவின் அறிக்கை விரைவில் தாக்கல்: ஐகோர்ட் கிளையில் தகவல்

மதுரை: விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பல்லை பிடுங்கிய விவகாரத்தில், ஐஏஎஸ் அதிகாரி அமுதாவின் அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என ஐகோர்ட் கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தை சேர்ந்த அருண்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: என் மீது அம்பாசமுத்திரம் போலீசார் பொய் வழக்கு பதிந்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். என்னை கடுமையாக தாக்கியதில் எனது 4 பற்கள் உடைக்கப்பட்டன. ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங், விசாரணை கைதிகள் பலரின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்துள்ளார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

குற்றப்பத்திரிகையை விரைவில் தாக்கல் செய்யவும், அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் மார்ச் 10ல் சிசிடிவி கேமரா பதிவுகளை எனக்கு வழங்கவும், எஸ்சி-எஸ்டி பிரிவின் கீழ் வழக்கு பதிந்து உரிய இழப்பீடு வழங்கவும், ஐஏஎஸ் அதிகாரி அமுதா தலைமையிலான உயர்மட்ட குழு அறிக்கையை எனக்கு வழங்குமாறும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி டி. நாகார்ஜூன் முன் நேற்று மீண்டும் விசாரனைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ஐஏஎஸ் அதிகாரி அமுதாவின் விசாரணை அறிக்கை தயாரிக்கும் பணி முடியும் நிலையில் உள்ளது. விரைவில் தாக்கல் செய்யப்படும் என கூறப்பட்டது. இதையடுத்து விசாரணையை அக். 16க்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

The post விசாரணைக்கு வந்தவர்களின் பல்லை பிடுங்கிய விவகாரம் ஐஏஎஸ் அதிகாரி அமுதாவின் அறிக்கை விரைவில் தாக்கல்: ஐகோர்ட் கிளையில் தகவல் appeared first on Dinakaran.

Tags : IAS ,Amutha ,ICourt ,Madurai ,Dinakaran ,
× RELATED ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு வினாத்தாள் மொழிமாற்றம்: ஐகோர்ட் யோசனை