×

கூட்டணியை முறித்து கொண்ட அதிமுக அண்ணாமலை ‘கப்சிப்’: பாதயாத்திரையில் அரசியல் பேச மாட்டேன் என காமெடி

கோவை: வாயில் வடை சுடும் அண்ணாமலை, அதிமுக கூட்டணி முறிவு குறித்து வாய் திறக்காமல் பொட்டி பாம்பாக அடங்கிவிட்டார். பாஜ மாநில தலைவர் அண்ணாமலையின் கிண்டல், மிரட்டல் மற்றும் அவதூறு பேச்சு காரணமாக பாஜவுடனான கூட்டணியை முறித்து கொள்வதாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து கோவையில் நடைபயணம் மேற்கொண்ட அண்ணாமலையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘பாத யாத்திரையின்போது அரசியல் பேச விரும்பவில்லை. ஆனாலும், என்னிடம் தொடர்ந்து வற்புறுத்தி கேள்வி கேட்கிறீர்கள். பாதயாத்திரை நடந்து கொண்டிருக்கிறது. எனவே அதிகம் பேச நேரமில்லை. பின்னர் பத்திரிகையாளர்களை கண்டிப்பாக சந்திக்கிறேன். என்னுடைய ஒரே ஒரு கருத்து என்னவென்றால், அதிமுகவினுடைய அறிக்கையை படித்தோம். ரிசொலுசன் போட்டிருக்காங்க.

எங்களுடைய தேசிய தலைமை இது குறித்து பேசுவாங்க. சரியான நேரத்தில் பேசுவாங்க. நாங்கள் பத்திரிகையாளர்களை சந்திக்கும்போது பின்னர் பேசுவோம். பாஜ ஒரு தேசிய கட்சி. எல்லாவற்றுக்கும் ஒரு புரொசிஜர் இருக்கு. தேசிய தலைவர்கள் இருக்காங்க. அவர்களது கவனத்துக்கு இது சென்றிருக்கிறது. எனவே இது குறித்து தேசிய தலைமை பேசும். இதுதான் எனது இன்றைய கருத்து’ என்றார். தொடர்ந்து, நிருபர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், கூட்டணி முறிவு தொடர்பாக வாய் திறக்க மறுத்துவிட்டார். இருப்பினும் விடாது நிருபர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பினர். உடனே, அருகில் இருந்த ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் வானதி சீனிவாசன் எம்எல்ஏ ஆகியோர் பேட்டியை முடித்து கொள்ளுமாறு கூறி நிருபர்கள் விலகி செல்ல அறிவுறுத்தி நடைபயணத்தை தொடர்ந்தனர்.

பத்திரிகையாளர் சந்திப்பு என்றால் மேதாவிபோல முந்திரிக்கொட்டைத்தனமாக முதல் ஆளாக நின்று தன்னை முன்னிலைப்படுத்தி பேசும் அண்ணாமலை, நேற்று ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், வானதி சீனிவாசன் எம்எல்ஏவை முன் நிற்க வைத்து பின்னாடி இருந்து பதிலளித்தார். பத்திரிகையாளர்களிடம் வாயில் நல்ல வடை சுடும் அண்ணாமலை, நேற்று கப்சிப் என அடங்கிவிட்டார். ‘எப்போதுமே நாங்கள் இல்லை என்றால் அதிமுக இல்லை. பாஜ தமிழ்நாட்டில் வளர்ந்துவிட்டது’ என்று வசனம் பேசி வந்த அண்ணாமலை, கூட்டணி தொடர்பாக தேசிய தலைமைதான் முடிவெடுக்கும் என்று சொல்லியதில்லை. நேற்று எல்லாமே தேசிய தலைமைதான் முடிவெடுக்கும் என்று பொட்டி பாம்புபோல் அடங்கிவிட்டார். இதில் இன்னொரு ஜோக் என்வென்றால், பாதயாத்திரையில் அரசியல் பேச மாட்டேன் என்று தெரிவித்து உள்ளார். அரசியல் பேசாமல் பாதயாத்திரையில் என்ன செய்கிறார் என்று அவர்தான் விளக்க வேண்டும்.

* முறிவுக்கு அண்ணாமலை காரணமா? வானதி சீனிவாசன் விளக்கம்
கோவையில் வானதி சீனிவாசன் எம்எல்ஏ நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அறிவித்தது குறித்து ஏற்கனவே அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். இந்த கூட்டணி தொடர்பாக தேசிய தலைமை அறிவிக்கும் வரை நாங்கள் எந்தவித கருத்தும் வெளியிடுவதாக இல்லை’’ என்றார். தொடர்ந்து அதிமுக, பாஜ கூட்டணி முறிவுக்கு அண்ணாமலைதான் காரணம் என்று கூறப்படுகிறதே என நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, ‘‘நாங்கள் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை. தேசிய தலைமை தகுந்த நேரத்தில் அறிவுறுத்தும்போது நாங்கள் இது தொடர்பாக கருத்து தெரிவிப்போம். அதிமுகவின் முடிவு குறித்து கருத்து கூற எங்களுக்கு அதிகாரம் இல்லை’’ என்றார்.

The post கூட்டணியை முறித்து கொண்ட அதிமுக அண்ணாமலை ‘கப்சிப்’: பாதயாத்திரையில் அரசியல் பேச மாட்டேன் என காமெடி appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Padayatra ,Coimbatore ,Annamalai ,BJP ,
× RELATED பழநியில் பகிரங்கமாக வெடித்த கோஷ்டி...