×

அடிப்படை வசதிகள் செய்துத்தராத கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் திடீர் போராட்டம்: குன்றத்தூரில் பரபரப்பு

குன்றத்துார்: குன்றத்தூரில் அடிப்படை வசதிகள் செய்துத்தராத கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. குன்றத்தூர் பிரதான சாலையில் தனியாருக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு வந்த மாணவர்கள் நேராக வகுப்பிற்கு செல்லாமல் கல்லூரி நுழைவாயிலில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கல்லூரி நிர்வாகம் மற்றும் குன்றத்தூர் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது, மாணவர்கள் கூறுகையில், ‘கல்லூரியில் மாணவர்களுக்கு பாடம் எடுக்க போதிய பேராசிரியர்கள் இல்லை. கல்லூரியில் குடிநீர் வசதி, கழிவறை வசதி போன்ற எந்தவித அடிப்படை வசதிகளும் முறையாக இல்லாமல் உள்ளது. ஆனால், மாணவர்கள் கல்லூரிக்கு தாமதமாக வந்தால், என்னதான் உண்மையான காரணங்களை கூறினாலும் கூட, கல்லூரி நிர்வாகம் அதனை ஏற்க மறுத்து, அதிகளவு அபராத தொகை வசூல் செய்வதிலேயே குறியாக உள்ளது. மேலும், அதிகளவு பணத்தை செலவு செய்து, கல்லூரியில் படிக்க வந்தால், இங்கு கற்றுக்கொடுக்க போதிய ஆசிரியர்கள் இல்லை.

இதனால், தங்களது கல்வி பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர். அதனால்தான் இன்று நாங்கள் வகுப்புகளை புறக்கணித்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டோம்’ என்றனர். பின்னர் போலீசாரின் வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை கைவிட்ட மாணவர்கள் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். மாணவர்களின் இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post அடிப்படை வசதிகள் செய்துத்தராத கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் திடீர் போராட்டம்: குன்றத்தூரில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Kuntatore ,Kuntarthur ,Kuntattur ,Kuntartur ,
× RELATED சிறுகளத்தூர் ஊராட்சியில் சாலை...