×

செய்யூர் அருகே ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை, பள்ளி சமையல் கூடம்: பாபு எம்எல்ஏ திறந்து வைத்தார்

செய்யூர்: செய்யூர் அருகே ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய ரேஷன் கடை மற்றும் பள்ளி சமையல் கூடத்தை பனையூர் பாபு எம்எல்ஏ திறந்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சியில் தழுதாளிக்குப்பம் மீனவ கிராமத்தில், பல ஆண்டுகளாக சேதமடைந்த ரேஷன் கடை செயல்பட்டு வந்தது. இந்த கட்டிடத்தில் மழைக்காலங்களில் மழைநீர் கசிவு ஏற்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த அரிசி, சர்க்கரை, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் வீணாகி வந்தது. இதனால், அப்பகுதி மக்கள் செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபுவிடம் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.

உடனடியாக புதிய ரேஷன் கடை கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டது. அதன் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் மோகன்தாஸ் முன்னிலை வகித்தார். பேரூராட்சி தலைவர் சம்யுக்தா அய்யனார் அனைவரையும் வரவேற்றார். மேலும், எம்எல்ஏ பனையூர் பாபு புதிய ரேஷன் கடை கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, பொதுமக்களுக்கு சர்க்கரை அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கி விற்பனையை தொடங்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து, கடப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் செய்யூர் சட்டமன்ற மேம்பாட்டு நிதி ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய சமையல் கூடத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட அவை தலைவர் இனியரசு, விசிக கட்சி மாவட்ட செயலாளர் தமிழினி, முன்னாள் மாவட்ட செயலாளர் சூ.க.ஆதவன், மீனவர் அணி அமைப்பாளர் பாரத், உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராம பொதுமக்கள், திமுக மற்றும் விசிக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post செய்யூர் அருகே ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை, பள்ளி சமையல் கூடம்: பாபு எம்எல்ஏ திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Babu MLA ,Seiyur ,Seyyur ,Dinakaran ,
× RELATED சித்தாமூர் ஒன்றியத்தில் மக்களிடம் 5 ஆயிரம் மனுக்கள் பெற்ற எம்எல்ஏ