×

மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை செயல்படுத்த 20 இருளர் இன பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்கள்: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கலெக்டர் வழங்கினார்

திருவள்ளூர்: தமிழ்நாடு அரசு ‘பிளாஸ்டிக்குகளுக்கு எதிரான மக்கள் பிரசாரம்” செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் பங்குதாரர்களை அழைத்து இதுகுறித்து பொதுமக்களிடையே பிரசாரம் தொடங்கப்படும் என்றும் சட்டசபையில் அறிவித்தது. இதற்கிடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 23.12.2021 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் ”மீண்டும் மஞ்சப்பை” என்ற மக்கள் பிரசாரத்தை தொடங்கி வைத்தார். மாநிலம் முழுவதும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட அளவில் ”மீண்டும் மஞ்சப்பை” பிரசாரத்தை அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல்வேறு அமைப்புகளுடன் நடத்த மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதனை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவுறுத்தலின் பேரில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், திருவள்ளூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன் மூலம் தொழிற்சாலைகள் நிதியுதவியுடன் 6 மஞ்சப்பை விற்பனை இயந்திரங்கள் பெறப்பட்டன. இந்த மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தில் ரூ.10 செலுத்தி ஒரு மஞ்சப்பையை பெற்றுக்கொள்ளலாம். திருவள்ளூர் மாவட்டத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக உள்ள இந்த மஞ்சப்பை உபயோகம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து முதன்முறையாக மஞ்சப்பை வழங்கும் இயந்திரத்தை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து திருவள்ளூரில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்திலும், திருவள்ளூர் பேருந்து நிலையத்திலும், திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயில் வளாகத்திலும் மஞ்சப்பை வழங்கும் இயந்திரம் நிறுவப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் மஞ்சப்பை இயந்திரங்களுக்கு தொடர்ச்சியாக தேவைப்படும் மஞ்சப்பைகளை தைப்பதற்கு முதற்கட்டமாக 10 தையல் இயந்திரங்கள் தனியார் நிறுவன பங்களிப்பின் மூலம் கலெக்டரின் அறிவுறுத்தலின்படி தமிழ் நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன் மூலமாக பெறப்பட்டு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலகத்திற்கு வழங்கப்பட்டது.

மேலும், இதன் தொடர்ச்சியாக 2ம் கட்டமாக 20 தையல் இயந்திரங்களை சர்வதேச ஓசோன் தினத்தை முன்னிட்டு தனியார் நிறுவன பங்களிப்பின் மூலம் நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் இலவசமாக தையல் பயிற்சி முடித்த 20 இருளர் இன பெண்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி பொறியாளர் சபரிநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை செயல்படுத்த 20 இருளர் இன பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்கள்: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Board of Control ,Thiruvallur ,Government of Tamil Nadu ,Propaganda ,Plastics' ,Tamil Nadu Pollution Board ,
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...