×

பழவேற்காட்டில் மீன் வளத்துறை சார்பில் கொடுவா மீன் குஞ்சுகள் கடலில் விடும் நிகழ்ச்சி

பொன்னேரி: தமிழ்நாடு மீன் வளத்துறை சார்பில் பழவேற்காட்டில் கொடுவா மீன் குஞ்சுகளை வளர்த்து கடலில் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. 2017ம் ஆண்டு சென்னைக்கு அருகே உள்ள எண்ணூர் காட்டுபள்ளி கிராமத்தில் உள்ள காமராஜர் தனியார் துறைமுகம் அருகே கடலில் எல்.பி.ஜி டேங்கர் கப்பலும், கச்சா எண்ணெய் நிரப்பப்பட்ட, டான் காஞ்சிபுரம் என்ற கப்பலும் மோதி கொண்டது. இதனால், கடலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டது. எனவே, எண்ணூர் கடற்பகுதி மற்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மீன்வளம் பாதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, மீன்பிடித் தொழிலும் மீன் வியாபாரமும் பாதிக்கப்பட்டது.

அதன் தாக்கம் காரணமாக பாதிப்பு ஏற்படுத்திய டான் காஞ்சிபுரம் என்ற தனியார் கப்பல் நிறுவனத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கும், படகு உரிமையாளர்களுக்கும் மற்றும் மீன் வியாபாரிகளுக்கும் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில், மேற்படி 3 மாவட்டங்களில் இழந்த மீன்வளத்தை மீட்டெடுக்கும் விதமாக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் இறால் மற்றும் மீன்களை வளர்த்தெடுத்து கடலில் இருப்பு செய்ய திட்டம் வகுக்கப்பட்டது. இதற்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையால் அனுமதி வழங்கப்பட்டது.

முதற்கட்டமாக ஷீ பாஸ் எனப்படும் கொடுவா இன மீன்களை பழவேற்காடு பகுதி கடலில் இருப்பு செய்ய ராமநாதபுரம் மாவட்டம் மண்டல அரசு மீன் பண்ணையிலிருந்து நன்கு வளர்ந்த 12 செ.மீ உள்ள கொடுவா இன மீன்கள் நேற்று கொண்டுவரப்பட்டு பழவேற்காடு கடலில் விடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை இணை இயக்குநர் சந்திரா, மீன் வளத்துறை உதவி இயக்குநர் கங்காதரன், லைட்அவுஸ் ஊராட்சி மன்ற தலைவர் கஜேந்திரன், பழவேற்காடு மீன்விற்பனை கூட்டுறவு இணையம் தலைவர் நாராயணன் மற்றும் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், மீனவ நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post பழவேற்காட்டில் மீன் வளத்துறை சார்பில் கொடுவா மீன் குஞ்சுகள் கடலில் விடும் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Department of Fisheries ,Palavekkat ,Ponneri ,Tamil Nadu Fisheries Department ,
× RELATED கன்னியாகுமரி மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் போராட்டம்..!!