×

திருவள்ளூர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை: கலெக்டர் தொடங்கி வைத்தார்

திருவள்ளூர்: திருவள்ளூர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார். திருவள்ளூர் நகராட்சி, காந்தி தெருவில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் நேற்று தீபாவளி பண்டிகை கால முதல் சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் அருள்ராஜன் தலைமை தாங்கினார். விற்பனை மேலாளர்கள் பழனிச்சாமி, துளசிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், சிறப்பு தள்ளுபடி விற்பனையை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

மேலும் அவர், விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள பட்டுபுடவைகள், வேட்டிகள் உள்ளிட்ட பல்வேறு ஆடை ரகங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:- கோ-ஆப்டெக்ஸ் என்றால் கைத்தறி. கைத்தறி என்றால் கோ-ஆப்டெக்ஸ் என அனைவராலும் அறியப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் கடந்த 1935ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. தொடர்ந்து 88 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பான முறையில் சேவை புரிந்து வரும் ஓர் தலைமை கூட்டுறவு நிறுவனமாக கோ-ஆப்டெக்ஸ் உள்ளது.

வாடிக்கையாளர்களில் இன்றைய இளைய தலைமுறையினரின் மாறிவரும் ரசனைகளுக்கேற்ப அவர்களின் தேவைகளை அறிந்து கோ-ஆப் டெக்ஸ் நிறுவனம் புத்தம் புதிய வடிவமைப்புகளில் கைத்தறி ரகங்களை விற்பனை செய்தும், விழா காலங்களில் சிறப்பு தள்ளுபடி அளித்தும் கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பினை அளித்து வருகிறது. வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப இந்த ஆண்டும் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையினை கோ-ஆப்டெக்ஸ் 30 சதவீத தள்ளுபடியுடன் அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த ஆண்டு திருவள்ளூர் விற்பனை நிலையத்திற்கு தீபாவளி விற்பனைக்கு ரூ.42 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு புதிய ரகங்களில் புதுப்புது வண்ணங்களில் பட்டு மற்றும் கைத்தறி துணிகள் வரவழைக்கப்பட்டு, விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், இங்கு காஞ்சிபுரம் பட்டு, ஆரணி பட்டு, திருப்புவனம் பட்டுப்புடவைகளும், நெகமம் சுங்கடி, கோவை கோரா, செட்டிநாடு பருத்தி புடவைகள், சேலம் பட்டு வேஷ்டிகள், பவானி ஜமுக்காளம், ஆண்களுக்கான ஆயத்த ஆடைகள், லுங்கிகள், போர்வைகள், திரைசீலைகள், குர்த்தீஸ்கள், ஏற்றுமதி ரகங்கள் என கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் விற்பனைக்காக ஏராளமாக துணி ரகங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கும் வட்டி இல்லா கடன் வசதி அளிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வசதிக்காகவும் அவர்கள் நிரந்தர வாடிக்கையாளராக அமைய வேண்டும் என்பதை கருத்தில் கொண்டும் கோ-ஆப் டெக்ஸ் மாதாந்திர சேமிப்பு திட்டம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் 11 மாதங்கள் சந்தா தொகை செலுத்தினால் போதும். 12வது மாதத் தவணையினை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் செலுத்தும் என்பதால் இத்திட்டம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆதலால், இந்த ஆண்டு தீபாவளி விற்பனையை கோ-ஆப்டெக்ஸ் ஆடைகளையும் பொதுமக்கள் வாங்கி மகிழ்ந்திட வேண்டுமென்று கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

The post திருவள்ளூர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை: கலெக்டர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Diwali ,Tiruvallur Co-Optex outlet ,Collector ,Tiruvallur ,Tiruvallur co-optex ,Alby ,John Varghese.… ,
× RELATED மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள்...