×

தி.நகரில் பிரபல துணி கடையின் குடோனில் பயங்கர தீ விபத்து: துணிகள் எரிந்து நாசம்

சென்னை: தி.நகரில் உள்ள பிரபல துணிக்கடைக்கு சொந்தமான குடோனில், நேற்று காலை ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் பல லட்சம் மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசமானது. தீயணைப்பு வீரர்கள் உரிய நேரத்தில் தீயை கட்டுப்படுத்தியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தி.நகரில் உள்ள பிரபல துணிக்கடையின் தலைமை அலுவலகம் 3 மாடி கட்டிடத்தில், தி.நகர் சிவஞானம் தெருவில் உள்ளது. இதில், தரைத்தளம் பார்க்கிங் பகுதியாகவும், முதல் தளத்தில் அலுவலகமும், மற்ற 2 தளங்களில் துணி வைக்கும் குடோனாக உள்ளது.

இந்த கட்டிடத்தின் 2வது மாடியில் இருந்து நேற்று காலை 6.15 மணிக்கு, திடீரென கரும்புகை வெளியேறியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த செக்யூரிட்டி, உடனே தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், தி.நகர், தேனாம்பேட்டை பகுதியில் இருந்து 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

அதற்குள் தீ மற்ற தளங்களில் வேகமாக பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. உடனே தீயணைப்பு வீரர்கள், கட்டிடத்தின் மின் இணைப்பை துண்டித்து, அலுவலகத்தின் கண்ணாடியை உடைத்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது.
இதனால், அருகே உள்ள குடியிருப்புகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசமானது. முதற்கட்ட விசாரணையில் 2வது தளத்தில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தி.நகரில் பிரபல துணிக்கடைக்கு சொந்தமான குடோனில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post தி.நகரில் பிரபல துணி கடையின் குடோனில் பயங்கர தீ விபத்து: துணிகள் எரிந்து நாசம் appeared first on Dinakaran.

Tags : D. Nagar ,CHENNAI ,
× RELATED தி.நகர், மேற்கு மாம்பலத்தில் மழைநீரில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி