×

புது கும்மிடிப்பூண்டியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு: கலெக்டரிடம் ஊராட்சி தலைவர், கவுன்சிலர்கள் புகார்

திருவள்ளூர்: புது கும்மிடிப்பூண்டியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் ஊராட்சி தலைவர், கவுன்சிலர்கள் மற்றும் கிராம மக்கள் புகார்மனு அளித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஊராட்சியில் சர்வே எண் 70/6, பழைய சர்வே எண் 70/1, பட்டா எண்.2732, பிளாட் நம்பர் 190கி, மொத்த விஸ்தீரணம் கொண்ட 1200 சதுர அடிகள் கொண்ட வீட்டு மனையில் ஏர்டெல் நிறுவனம் குடியிருப்புகளுக்கு மத்தியில் செல்போன் கோபுரம் அமைக்க உத்தரவு பெற்றுள்ளது. ஆனால் உத்தரவு வழங்குவதற்கு முன்னர் அதிகாரிகள் எவ்வித ஆய்வும் நடத்தவில்லை.

குறிப்பாக செல்போன் கோபுரம் இந்தப் பகுதியில் எந்த இடத்தில் அமைக்கப் போகிறார்கள், இங்கு என்னென்ன அமைந்துள்ளன என்பதையும் அதிகாரியும் இதுவரை ஆய்வு செய்யவில்லை. குடியிருப்புகளுக்கு மத்தியில் செல்போன் கோபுரம் அமைக்க மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. செல்போன் கோபுரம் அமையவிருக்கும் விவரம் தெரிந்த நாளிலிருந்து பொதுமக்கள் இதுகுறித்து அச்சத்தையும், ஆட்சேபனையையும் தெரிவித்து வருகின்றனர். இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், கருத்து கேட்பு கூட்டம் எதுவும் நடத்தாமல் மக்களை அச்சுறுத்தும் வகையில், செல்போன் கோபுரம் அமைப்பதில் மட்டுமே அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் குறிக்கோளாக உள்ளனர்.

தற்போது செல்போன் கோபுரம் அமைய உள்ள பகுதியானது குடியிருப்புகளின் மத்தியில் உள்ளது. கோபுரம் அமையவுள்ள இடத்தையொட்டி குழந்தைகளுக்கான சத்துணவுக் கூடம் உள்ளது. மக்களின் தேவைக்காக உயர்மட்ட குடிநீர் தொட்டியும் அங்கு அமைந்துள்ளது. இந்த செல்போன் டவர் அமைந்தால், அதனால் ஏற்படும் கதிர்வீச்சுகளின் காரணமாக, குழந்தைகள், முதியோர், கர்ப்பிணிகள், அங்கு வளர்க்கப்படும் கால்நடைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் நிலையத்தில் நிறுவனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டு, செல்போன் டவர் அமைக்க பாதுகாப்பு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றமும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனை வைத்து இன்று (26ம் தேதி) செல்போன் டவர் அமைக்கும் பணி தொடங்க உள்ளது எனவும், யாராவது ஆட்சேபனை தெரிவித்தால் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் எனவும் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் பாதிப்படையும் மக்கள் ஊராட்சி மன்ற நிர்வாத்திடம் புகார் அளித்தனர். அதன் பேரில் நேற்று முன்தினம் மாலை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டு பள்ளிக்கு அருகாமையிலும், குடியிருப்புகளுக்கு மத்தியிலும் செல்போன் கோபுரம் அமைக்கக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து, பொதுமக்களின் எதிர்ப்பினை கருத்தில் கொண்டு செல்போன் கோபுரத்தை வேறு இடத்தில் அமைக்க மறுபரிசீலனை செய்யுமாறு புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.அஸ்வினி சுகுமாறன், ஒன்றிய கவுன்சிலர்கள் சீனிவாசன், மதன்மோகன், துணைத் தலைவர் எல்லப்பன், வார்டு உறுப்பினர்கள் மணிகண்டன், நேருஜி, தயாளன், சகுந்தலா, செல்வி, பாலயோகி நகர் குடியிருப்பு நலச்சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனுவை அளித்தனர். செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு அந்த மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர். மனுவைப் பெற்றக் கொண்ட கலெக்டர், இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

The post புது கும்மிடிப்பூண்டியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு: கலெக்டரிடம் ஊராட்சி தலைவர், கவுன்சிலர்கள் புகார் appeared first on Dinakaran.

Tags : Pudu Kummidipoondi ,Panchayat ,Thiruvallur ,
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு