×

‘பீடை ஒழிந்தது… பிணி கழன்றது’ அதிமுக ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிடுவார்: மதுரை மாவட்ட பாஜ தலைவர் பேட்டி

மதுரை: அதிமுக ஊழல் பட்டியலை அண்ணாமலை விரைவில் வெளியிடுவார் என மதுரை மாநகர் மாவட்ட பாஜ தலைவர் தெரிவித்தார். பாஜ – அதிமுக கூட்டணி முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து மதுரை மாநகர் மாவட்ட பாஜவினர் நேற்றிரவு பட்டாசு வெடித்து கொண்டாடினர். மதுரை வைகை வடகரையில் அழகர் ஆற்றில் இறங்கும் பகுதியில் பட்டாசு வெடித்து நடந்த கொண்டாட்டத்திற்கு மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் தலைமை தாங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘பாஜ கூட்டணியில் இருந்து அதிமுக விலகிக் கொண்டதை பெரும்பாலான பாஜ தொண்டர்கள் வரவேற்றுள்ளனர். வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவினரின் ஊழலை வீடு வீடாக எடுத்துச் சென்று பிரசாரம் செய்கின்ற பணியில் பாஜ கட்சியினர் ஈடுபட வேண்டும்.

எங்களை பொறுத்தவரையில் பீடை ஒழிந்தது. பிணி கழன்றது. தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் திருடிச் சென்றவர்களின் ஆவணங்கள் எங்கும் போகவில்லை. இவர்களுக்கு சிறைச்சாலை கதவு விரைவில் திறக்கும். அண்ணாமலை விரைவில் அதிமுக ஊழல் பட்டியலை வெளியிடுவார்’’ என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர்கள் சகாதேவன், சதீஷ்குமார், பொதுச்செயலாளர் ராஜ்குமார், மாவட்டச் செயலாளர்கள் சுப்பா நாகுலு, கிருஷ்ணன், தனலட்சுமி, ஊடகப் பிரிவு ரவிச்சந்திர பாண்டியன் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு பட்டாசு வெடித்தனர்.

The post ‘பீடை ஒழிந்தது… பிணி கழன்றது’ அதிமுக ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிடுவார்: மதுரை மாவட்ட பாஜ தலைவர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Anamalai ,Madurai District Baja ,Madurai ,Annamalai ,Madurai Muncipal District ,Baja Leader ,Baja ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு...