×

ஊத்துக்கோட்டையில் கிடப்பில் போடப்பட்ட சாலை பணிகள்: விரைந்து முடிக்க கோரிக்கை

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் நிதி ஒதுக்கப்பட்டு 4 மாதமாகியும் போடப்படாத சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள 5வது வார்டு அங்காளம்மன் கோயில் தெரு சாலை, கடந்த 20 வருடங்களுக்கு முன்பு போடப்பட்டது. தற்போது இந்த சாலை மழை பெய்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் பொது மக்கள் நடந்து செல்வதற்கே சிரமப்படுகிறார்கள். இதேபோல் 13வது வார்டில் அரசு மருத்துவமனை சாலை கடந்த 15 வருடங்களுக்கு முன்பு போடப்பட்டது.

இந்த சாலை வழியாகதான் மேல் சிட்ரபாக்கம், கீழ் சிட்ரபாக்கம் போன்ற பகுதிகளுக்கு அப்பகுதி மக்கள் செல்வார்கள். இதே போல் அம்பேத்கர் நகர் காந்தி தெரு போன்ற பகுதிகளுக்கு பேவர் பிளாக் சாலை அமைக்க கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நடந்த பேரூராட்சி மன்ற கூட்டத்தில், 15வது நிதிக்குழு திட்டத்தின் மூலம் ரூ.49.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. அதற்கான டெண்டரும் விடப்பட்டது. ஆனால் 4 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை பணிகள் தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post ஊத்துக்கோட்டையில் கிடப்பில் போடப்பட்ட சாலை பணிகள்: விரைந்து முடிக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Uthukottai ,Oothukottai ,Oothukottai Municipal Corporation ,
× RELATED ஊத்துக்கோட்டை தாலுகா முன்பு வருவாய்...