×

கர்நாடக அணைகளில் உள்ள தண்ணீர் நிலவரம் குறித்து நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்: ஒன்றிய அரசுக்கு தேவகவுடா வேண்டுகோள்

பெங்களூரு: கர்நாடக அணைகளில் உள்ள தண்ணீர் நிலவரம் குறித்து சுதந்திரமான நிபுணர் குழுவை அமைத்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேலும் அவசர காலங்களில் மாநிலங்களுக்கிடையே தண்ணீர் பங்கீடு முறையை ஏற்படுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு முன்னாள் பிரதமர் தேவகவுடா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து பெங்களூருவில் உள்ள மஜத தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவு செயல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விஷயத்தில் ஆணையத்தின் மீதோ அல்லது நீதிமன்றத்தின் மீதோ நான் குற்றம் சொல்ல விரும்பவில்லை.

காரணம் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள நிலவரத்தை காவிரி மேலாண்மை ஆணையத்திடம் தெளிவுபடுத்தும் விஷயத்தில் மாநில அரசு தோல்வி கண்டுள்ளது. இந்த விஷயத்தில் ஒன்றிய நீர்ப்பாசன துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் சிறப்பு மனு தாக்கல் செய்ய வேண்டும். அதில் ஒன்றிய அரசின் சார்பில் சுதந்திரமான நிபுணர் குழுவை கர்நாடகம் அனுப்பி, நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள நான்கு அணைகளில் தற்போதுள்ள தண்ணீரின் அளவு, மாநிலத்தில் விவசாயிகள் செய்துள்ள பயிர் எவ்வளவு, அதற்கு தேவையான தண்ணீர், ராம்நகரம் மற்றும் பெங்களூரு மாவட்டங்களின் குடிநீருக்கு தேவையான தண்ணீர் எவ்வளவு என்பதை நேரில் ஆய்வு செய்து, நீதிமன்றத்தில் அறிக்கை கொடுக்க வேண்டும்.

மாநில அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். தமிழ்நாட்டு விவசாயிகள் வேறு நாட்டை சேர்ந்தவர்கள் அல்ல. அவர்களும் நமது சகோதரர்கள் தான். நமது விவசாயிகளும் வாழ வேண்டும். தமிழ்நாடு விவசாயிகளும் வாழ வேண்டும். ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழுவை நியமனம் செய்து, அவர்களை கர்நாடகாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மாநிலங்களவையில் வேண்டுகோள் விடுத்தேன். ஆனால் இதுவரை ஒன்றிய அரசு அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. ஒன்றிய அரசு உடனே நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்’ என்றார்.

The post கர்நாடக அணைகளில் உள்ள தண்ணீர் நிலவரம் குறித்து நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்: ஒன்றிய அரசுக்கு தேவகவுடா வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Devagavuda ,Government of the Union ,Bengaluru ,Expert Group ,Expert Committee ,Govakuda ,Dinakaran ,
× RELATED சினிமா டிக்கெட்டுக்கு செஸ் வரி: கர்நாடகா அரசு பரிசீலனை