×

டெண்டர் முறைகேடு வழக்கை விசாரிக்க எடப்பாடி பழனிசாமி தடையாக இருந்தார்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை வாதம்

புதுடெல்லி: கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில் ரூ. 4,800 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாக கூறி, முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அளித்த புகார் மீது சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் 2018ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இதில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததுடன், இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்,” ஆட்சி மாற்றம் காரணமாக மீண்டும் புதிதாக விசாரணை நடத்த தேவையில்லை என்று கடந்த ஜூலை 18ம் தேதி உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அனிருத்தா போஸ் மற்றும் பி.எம்.திரிவேதி ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அமித் ஆனந்த் திவாரி மற்றும் குமணன் ஆகியோர் வாதத்தில்,\\” டெண்டர் முறைகேடு விசாரணையின் போது மாநில லஞ்ச ஒழிப்புத்துறை அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி வசம் இருந்தது.

அதனால் அப்போது இருந்த அதிகாரிகள் அவருக்கு ஆதரவாக செயல்பட்டு விசாரணையை சரியாக மேற்கொள்ளாமல் முடித்துள்ளனர். குறிப்பாக டெண்டர் முறைகேடு விவகாரத்தில் அப்போதைய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவர்களது பணிகளை மேற்கொள்ள எடப்பாடி பழனிசாமி தடையாக இருந்துள்ளார் என தெரிவித்தனர். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம்,\\”இந்த வழக்கில் அனைத்து விசாரணைகளும் நடத்தி முடிக்கப்பட்டு சீலிடப்பட்ட கவரில் ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவை அனைத்தையும் அடிப்படையாக கொண்டு தான் மறு விசாரணை தேவையில்லை என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது என தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் விசாரணையை அக்டோபர் 17ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

The post டெண்டர் முறைகேடு வழக்கை விசாரிக்க எடப்பாடி பழனிசாமி தடையாக இருந்தார்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை வாதம் appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,Tamil Nadu Anti-Corruption Bureau ,Supreme Court ,New Delhi ,AIADMK ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் வெயில் அதிகமாக...