×

சுங்கச்சாவடிகள்-நெடுஞ்சாலை ஆணையம் ஒப்பந்தத்தில் பிரச்னை அரசு பஸ்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு பரபரப்பு வாதம்

சென்னை: அரசு பஸ்களுக்கு சுங்க கட்டணம் வசூலிப்பது தொடர்பாக ஒன்றிய அரசின் ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை என்று தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் அரசு பேருந்துகளுக்கு சுங்க கட்டணம் வசூலிக்க தடை விதிக்க கோரி விழுப்புரம் கோட்டம் அரசு போக்குவரத்து கழகம் உள்ளிட்ட போக்குவரத்து கழகங்கள் சார்பில் தாக்கல் செய்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றம் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ெஜனரல் வி.அருண் வாதிடும்போது, ‘‘சுங்க கட்டணம் வசூலிப்பது தொடர்பாக 2008 ஆண்டு கொண்டுவரப்பட்ட விதிகளை மீறி சுங்கசாவடி உரிமையாளர் செயல்படுகிறார்.

சுங்கசாவடியை கடக்கும் அரசு பஸ்களை முழு கட்டணம் செலுத்த நிர்ப்பந்திக்கிறார்கள். இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் சுங்கசாவடிகளுக்கு இடையிலான ஒப்பந்தம் நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஒப்புதல் பெற வேண்டும் என்பது கட்டாயம் என்று விதிகளில் உள்ளது. ஆனால் இதுவரை எந்த ஒப்பந்தமும் நாடாளுமன்றத்தில் இதுவரை ஒப்புதல் பெறவில்லை என்பதால் தற்போது சுங்க கட்டணம் வசூலிக்க முடியாது. ஆறு வழிச்சாலையாக மாற்றும்வரை 75 சதவீத சுங்க கட்டணத்தைத்தான் வசூலிக்க வேண்டும் என்று விதிகளில் கூறப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் சாலை போக்குவரத்து கழக சட்டம் 1950கீழ் அரசு பேருந்து போக்குவரத்து என்பது வணிக ரீதியான போக்குவரத்து இல்லை. ஏழை, அடித்தட்டு மக்களுக்கு கிராம புற மக்களுக்கும் அரசு போக்குவரத்துகள் சேவைகளை வழங்கி வருகிறது.

எனவே, சுங்க சாவடிகளில் அரசு பேருந்துகளுக்கு சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது என்று உத்தரவிட வேண்டும். இதுவரை வசூலித்து கட்டணத்தை திரும்ப அரசுக்கு தருமாறு உத்தரவிட வேண்டும் என்றார். இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒன்றிய அரசு மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆகியவற்றின் ஒப்பந்தபடி அரசு பேருந்துகளுக்கு சுங்க கட்டணம் வசூல் நடைமுறையில் இருந்து விதிவிலக்கு அளிக்க முடியாது. அந்தந்த சுங்க சாவடி கட்டணங்களை அரசு பேருந்துகள் செலுத்த வேண்டும் என்று வாதிட்டார். இந்த வழக்கில் வாதங்கள் முடிவடையாதால் விசாரணையை அக்டோபர் 21ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

The post சுங்கச்சாவடிகள்-நெடுஞ்சாலை ஆணையம் ஒப்பந்தத்தில் பிரச்னை அரசு பஸ்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு பரபரப்பு வாதம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Igordt ,Chennai ,Union Government ,Parliament ,Government of Tamil Nadu ,
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...