×

மீண்டும், மீண்டும் அவமானப்படுத்தப்பட்டதால் அதிரடி நடவடிக்கை பாஜ கூட்டணியை முறித்தார் எடப்பாடி: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு பின் அதிமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: அவதூறு பேச்சு, நக்கல், கிண்டல், கேலி என்று அதிமுகவை தொடர்ந்து விமர்சித்து வந்த அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து பாஜ கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுத்து அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பாஜ கூட்டணியில் உள்ள கட்சிகள் வெளியேறி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜ இடம் பெற்றுள்ளது. தேசிய அளவில் பாஜ தலைமையிலான 38 கட்சிகளின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக 2வது பெரிய கட்சியாக இடம் பெற்றுள்ளது. மத்தியில் கூட்டணியில் இருந்தாலும் தமிழ்நாட்டில் அதிமுகவுக்கும் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலைக்கும் இடையே மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அண்மையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஊழல் பேர்வழி என அண்ணாமலை விமர்சித்திருந்தார். 1991-96ம் ஆண்டு ஆட்சிதான் தமிழகத்தில் மோசமான ஊழல் ஆட்சி என்றும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். இதனையடுத்து சென்னையில் கடந்த ஜூன் 13ம் தேதி எடப்பாடி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில் அண்ணாமலைக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் அதிமுக – பாஜ கூட்டணி முறியும் நிலை உருவானது. பின்னர், டெல்லி பாஜ தலைமை அண்ணாமலையை கண்டித்து வைத்திருந்தது. இதனைத் தொடர்ந்து பேரறிஞர் அண்ணா குறித்தும் அண்ணாமலை கடந்த 10 நாட்களுக்கு முன் கடுமையாக விமர்சித்தார். இதற்கும் அதிமுக தரப்பில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அண்ணாவை விமர்சித்தவர்கள் நாக்கு துண்டாகும் என மூத்த அதிமுக தலைவர் செல்லூர் ராஜூ எச்சரித்தார். அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் பாஜவுக்கு ‘காலே’ கிடையாது. அவர்களை நாங்கள் (அதிமுக) ஏன் தூக்கி சுமக்க வேண்டும். பாஜவால் நோட்டாவை கூட தாண்ட முடியாது. பாஜ தலைவருக்கே லாயக்கற்றவர் அண்ணாமலை. மேலிடம் சொல்லித்தான் அண்ணாமலை இப்படி பேசுகிறார். இனி அதிமுக கூட்டணியில் பாஜ இல்லை என்று அதிரடியாக கடந்த 18ம் தேதி அறிவித்தார். இதேபோன்று சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார் ஆகியோரும் கண்டனம் தெரிவித்தனர். அதிமுக கூட்டணியில் பாஜ இல்லை என்று ஜெயக்குமார் அறிவித்தவுடனே மகிழ்ச்சி அடைந்த அதிமுக தொண்டர்கள் பட்டாசு மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இதற்கு போட்டியாக பாஜ நிர்வாகிகளும் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். ஆனாலும், அண்ணா குறித்த தான் கூறிய கருத்தில் உறுதியாக இருப்பதாக அண்ணாமலை பதில் கொடுத்தார். யாருக்கும் கும்பிடு போட்டு, தவழ்ந்து வந்து ஆட்சியை பிடிக்கவில்லை. எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க நாங்கள் (பாஜ) தமிழகத்தில் கட்சி நடத்தவில்லை என்று அதிரடியாக கூறினார். இதனால் அதிமுக தலைமை, தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை மீது கடும் கோபம் அடைந்தது. இந்நிலையில், அதிமுக – பாஜ கூட்டணியில் சமரசம் ஏற்படும் வகையில் செல்லூர் ராஜூ ஒரு பேட்டி அளித்தார். மத்தியில் பிரதமராக மோடிக்கு அதிமுக ஆதரவு தருகிறது. தமிழ்நாட்டில் முதல்வராக எடப்பாடி பழனிசாமிக்கு பாஜ ஆதரவு தர வேண்டும் என்றார்.

ஆனால் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க பாஜ ஆதரவு தராது என அண்ணாமலை மீண்டும் முருங்கை மரம் ஏறினார். இதனால் அண்ணாமலை பற்றி புகார் அளிக்க அதிமுக 2ம் கட்ட தலைவர்களான கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட தலைவர்கள் கொண்ட குழு கடந்த வெள்ளிக்கிழமை யாருக்கும் தெரியாமல் கொச்சி மற்றும் பெங்களூர் வழியாக திடீரென டெல்லி சென்றது. அவர்களை அமித்ஷா பார்க்க மறுத்துவிட்டார். பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோரை சந்தித்து, தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால் அண்ணாமலையை மாற்ற முடியாது என ஜே.பி.நட்டா திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனால், அதிமுக – பாஜ கூட்டணி விஷயத்தில் ஒரு முடிவை எடுத்தாக வேண்டும் என்ற நிலைக்கு எடப்பாடி பழனிசாமி தள்ளப்பட்டார்.

இந்நிலையில் சென்னையில் நேற்று மாலை 4 மணிக்கு அதிமுக தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் கூட்டம் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் என 100க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் பேசிய அனைவரும், அண்ணா, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக கட்சி மீதும் தொடர்ந்து பாஜ மாநில தலைவர் அண்ணாமலை குறைகூறி வருகிறார். கட்சி மேலிடம் சொல்லாமல் இப்படி பேசுவதற்கு வாய்ப்பு இல்லை. இதனால் பாஜவுடன் கூட்டணி வேண்டாம் என்று வலியுறுத்தி பேசினர். இந்த கூட்டம் சுமார் 45 நிமிடம் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பிறகு, மாவட்ட செயலாளர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி நிருபர்களிடம் கூறியதாவது:

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் ஏகமானதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைமை, கடந்த ஒருவருட காலமாக திட்டமிட்டே, வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு, அதிமுக மீதும், எங்களுடைய கட்சி தெய்வங்களான பேரறிஞர் அண்ணாவையும், ஜெயலலிதாவையும் அவதூறாக பேசியும், எங்களின் கொள்கைகளை விமர்சித்தும் வருகின்றது.

மேலும், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைமை, கடந்த 20.8.2023 அன்று மதுரையில் நடைபெற்ற வரலாற்று சிறப்பு மிக்க, அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டை சிறுமைப்படுத்தியும், 2
கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களை வழிநடத்தி வரும், எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பற்றி அவதூறாக விமர்சித்தும் வருகிறது. இந்த செயல், அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (நேற்று) மாலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற, தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டத்தில், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அதிமுக இன்று (நேற்று) முதல், பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இருந்தும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது. இது ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட முடிவு. முழுமையாக ஜனநாயக முறையில், இந்த தீர்மானத்தை ஒருவர் கூட எதிர்க்காமல் முழுமையாக 100 சதவீதம் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட முடிவு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

*பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
பாஜ கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுகிறது என்று கட்சி தலைமை அறிவித்த உடனே, அங்கு கூடி இருந்த அதிமுக தொண்டர்கள் பட்டாசு, இனிப்பு வழங்கி கொண்டாடினர். பெண்கள் நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கட்சியின் முடிவை ஏற்கனவே தெரிந்து வைத்தது போன்றே, கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தயாராக தங்கள் கார்களில் பட்டாசுகளை வாங்கி குவித்து வைத்திருந்தனர். மாவட்ட செயலாளர் கூட்டம் முடிந்த சில நிமிடங்களிலேயே பட்டாசு மற்றும் இனிப்பு விநியோகம் தொடங்கியது. அதன்பிறகு, கட்சி சார்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை முனுசாமி வாசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

*நன்றி, மீண்டும் வராதீர்கள்
எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜவுடன் கூட்டணி இல்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, பாஜவுடனான கூட்டணி முறிவை டிவிட்டர் பக்கத்தில் அதிமுக உடனடியாக வெளியிட்டுள்ளது. அதில் ‘‘நன்றி, மீண்டும் வராதீர்கள்’’ என்ற ஹேஷ்டேக்னுடன் பதிவிட்டுள்ளது. இது பாஜவினரை மேலும் கோபம் அடைய செய்துள்ளது.

* 4 ஆண்டுகள் அதிமுகவை ஆட்டிப்படைத்த பாஜ
2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தார். பின்னர் சசிகலா முதல்வராக வர ஆசைப்பட்டார். ஆனால், பாஜ இதில் மறைமுகமாக தலையிட்டு, எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியில் உட்கார வைத்தது. 2017ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு மார்ச் மாதம் வரை சுமார் 4 ஆண்டுகளாக மத்திய பாஜ அரசு அதிமுகவை ஒரு கைப்பாவையாக பயன்படுத்தியது. ஒன்றிய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு அதிமுக ஆதரவை மிரட்டி பெற்றது. ஜெயலலிதா எதிர்த்த திட்டங்களையெல்லாம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசை வைத்து நிறைவேற்றிக் கொண்டது.

காரணம், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலர் மீது வருமான வரி சோதனை, அமலாக்க துறை சோதனை நடத்தி, அவர்களின் ஊழல்களையெல்லாம் ஒன்றிய அரசு ஆதாரத்துடன் கைப்பற்றி வைத்துள்ளது. ஆனால், இதில் ஒரு வழக்கில் கூட ஒரு முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வழக்கை வைத்து மிரட்டியே அதிமுகவை செயல்படவிடாமல், அதன்மூலம் தமிழகத்தில் பாஜவை வளர்க்க டெல்லி பாஜ திட்டமிட்டது. அதனால்தான், அண்ணாமலை அதிமுக கட்சி மற்றும் தலைவர்களை இஷ்டத்துக்கு பேசி வந்தார். தற்போது, வழக்கு உள்ளிட்ட பின்விளைவுகளை பற்றி கவலைப்படாமல், அதிமுக கூட்டணியில் இருந்து பாஜவை எடப்பாடி பழனிசாமி வெளியேற்றியுள்ளார். இதற்கு அதிமுக தொண்டர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

The post மீண்டும், மீண்டும் அவமானப்படுத்தப்பட்டதால் அதிரடி நடவடிக்கை பாஜ கூட்டணியை முறித்தார் எடப்பாடி: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு பின் அதிமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : baja alliance ,edapadi ,Chennai ,Anamalai ,-Insulted Action Action ,Baja Broke Alliance ,Dinakaran ,
× RELATED ஆதிதிராவிடர் மாணவர் விடுதி விவகாரம்:...