பல்லாவரம்: பல்லாவரம் பகுதியில் கனமழை காரணமாக பக்கத்து வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் பரிதாபமாக பலியானார். பழைய பல்லாவரம், பாரதி நகர், மலைமகள் தெருவை சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மனைவி சத்தியவாணி (55). அதே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார். இந்த தம்பதி, தனது மருமகன் வீட்டின் முதல் தளத்தில் குடிசை அமைத்து வசித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. நள்ளிரவு நேரம் தம்பதி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென எதிர்பாராத விதமாக பக்கத்து வீட்டு மதில்சுவர் பலத்த சத்தத்துடன் இடிந்து, சத்தியவாணி குடிசை மீது விழுந்தது.
இதில், சத்தியவாணி மீது கட்டிட இடிபாடுகள் விழுந்ததில், படுகாயமடைந்தார். உடனடியாக கன்னியப்பன், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இடிபாடுகளை அகற்றி பார்த்தபோது, சத்தியவாணி சம்பவ இடத்திலயே இறந்தது தெரிந்தது. கன்னியப்பன் சற்று தள்ளி படுத்து உறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தகவலறிந்த பல்லாவரம் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து, சத்தியவாணியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், இவர்கள் வீடு அமைந்துள்ள இடம் மலைப்பகுதி. இதில், இவர்கள் வீடு கீழ் பகுதியிலும், பக்கத்து வீடு மலைக்கு மேலும் அமைந்துள்ளது. இதனால், பக்கத்து வீட்டின் மதில்சுவர் சத்தியவாணி குடிசைக்கு இணையாக உயரத்தில் இருந்துள்ளது. இந்த சுற்றுச்சுவர் மிகப் பழமையானதும், போதிய தூண்கள் அமைக்காமல் சுற்றுச்சுவர் கட்டப்பட்டிருந்ததால், ஒருநாள் மழைக்கே பலமிழந்து இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. கனமழை காரணமாக பக்கத்து வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து குடிசை மீது விழுந்ததில் பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
The post கனமழை காரணமாக பக்கத்து வீட்டின் சுவர் இடிந்து பெண் பலி: பல்லாவரம் அருகே பரிதாபம் appeared first on Dinakaran.
