×

வயதான தம்பதியை கட்டிப்போட்டு 70 சவரன், ரூ.3.5 லட்சம் கொள்ளையடித்த உறவினர் உட்பட 3 பேர் பிடிபட்டனர்: கூலிப்படைக்கு வலை

அம்பத்தூர்: வில்லிவாக்கத்தில் வயதான தம்பதியை கட்டிப்போட்டு 70 சவரன் மற்றும் ₹3.5 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற வழக்கில், உறவினர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கூலிப்படையை தேடி வருகின்றனர். வில்லிவாக்கம், சிட்கோ நகர், 2வது பிரதான சாலையை சேர்ந்தவர் சோழன் (66). இவர், கட்டுமான தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி வனஜா (60). இவர்களுக்கு 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அனைவரும் திருமணமாகி, தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

தம்பதி மட்டும் தனியாக வசித்து வருகின்றனர். சோழன், தன்னிடம் வேலை செய்யும் கட்டிட தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக வீட்டில் ₹3.5 லட்சம் வைத்திருந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 22ம் தேதி அதிகாலை 3 மணியளவில், இவர்களது வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டது. வனஜா எழுந்துவந்து, கதவை திறந்துள்ளார். அப்போது மங்கி குல்லா மற்றும் ஹெல்மெட் அணிந்து கையில் கத்தியோடு அதிரடியாக உள்ளே நுழைந்த 5 மர்ம நபர்கள், கணவன் மற்றும் மனைவி இருவர் கழுத்திலும் கத்தியை வைத்து பணம் மற்றும் நகையை தருமாறு கேட்டு மிரட்டியுள்ளனர்.

பின்னர், கத்தி முனையில், பீரோவில் இருந்த ₹3.5 லட்சம் மற்றும் 70 சவரன் நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு கணவன், மனைவி இருவரது கைகளை பின்னால் கட்டி, வாயில் பிளாஸ்த்திரி ஒட்டி அறையில் அடைத்துவிட்டு, கதவை வெளிப்புறமாக பூட்டி விட்டு தப்பினர். பின்னர், சோழன் சாதுர்யமாக கைக்கட்டுகளை அவிழ்த்து தனது மகளுக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். மகள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வில்லிவாக்கம் போலீசார், 4 தனிப்படை அமைத்து விசாரித்தனர்.

அதில், சோழன் வீட்டின் அருகில், அவரது அக்கா மகன் ராமர் (45), குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர், அண்ணாநகரில் கடை நடத்தி வருகிறார். இவரது நண்பர் மேற்கு முகப்பேரை சேர்ந்த முகமது பக்ருதீன் (42), எல்.ஐ.சி. காலனியில் டெய்லர் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் டெய்லராக கொரட்டூரை சேர்ந்த ராதா (47) பணிபுரிந்து வந்தார். கணவரை இழந்த இவர், பண கஷ்டத்தில் இருந்துள்ளார்.

கடை உரிமையாளர் முகமது பக்ருதீன் வங்கியில் வீட்டு கடன் பெற்றுள்ளார். ஆனால், இந்த கடன் முறையாக கட்டமுடியாமல் நெருக்கடி ஏற்பட்டதால், தனது வீட்டை விற்பனை செய்ய முயன்றுள்ளார். அப்போது, ராமர் உதவியுடன் சோழனிடம் வீட்டை விற்பனை செய்ய முயன்றுள்ளார். ஆனால், அவர் வேண்டாம் என்று கூறிவிட்டார். இதையடுத்து, ₹5 லட்சம் கடன் கொடுக்கும்படி ராமர் கேட்டுள்ளார். அதற்கும், சோழன் மறுத்துள்ளார். அப்போது, சோழன் வீட்டில் நகை, பணம் அதிகளவில் இருப்பதை நோட்டமிட்ட முகமது பக்ருதீன், தனது நண்பரான ராமர் மற்றும் டெய்லர் ராதா ஆகியோருடன் சேர்ந்து சோழன் வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி, ஆவடியை சேர்ந்த கூலிப்படையை ஏற்பாடு செய்து, சோழன் வீட்டை ராதா மற்றும் பக்ருதீன் ஆகியோர் அடையாளம் காட்டியது தெரியவந்தது.

இதையடுத்து ராமர், முகமது பக்ருதீன் மற்றும் ராதா ஆகிய மூவரையும் நேற்று முன்தினம் வில்லிவாக்கம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20.5 சவரன், 24 கிராம் வெள்ளி, 2 பைக்குள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள கூலிப்படையை சேர்ந்த 5 பேரை தேடி வருகின்றனர்.

The post வயதான தம்பதியை கட்டிப்போட்டு 70 சவரன், ரூ.3.5 லட்சம் கொள்ளையடித்த உறவினர் உட்பட 3 பேர் பிடிபட்டனர்: கூலிப்படைக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Sawaran ,Ampathur ,Villivakam ,
× RELATED அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மாநகர...