×

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காத நிலையில் முதன்முறையாக வாக்களிக்கும் 93 வயது முதியவர்: சட்டீஸ்கர் தேர்தல் அதிகாரி தகவல்

காங்கர்: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத நிலையில் முதன் முறையாக 93 வயது முதியவர் சட்டீஸ்கர் பேரவை தேர்தலில் வாக்களிக்க உள்ளார். சட்டீஸ்கர் மாநிலம் பானுபிரதாப்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பைன்சகன்ஹர் கிராமத்தில் ஷேர் சிங் ஹெட்கோ (93) என்ற முதியவர் வசித்து வருகிறார். ஆனால் இதுவரை எந்தவொரு தேர்தலிலும் வாக்களிக்கவில்லை. அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாமல் இருந்ததால், வாக்களிக்கும் உரிமையை இழந்து இருந்தார்.

இந்நிலையில் விரைவில் சட்டீஸ்கர் மாநிலத்தில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால், மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரியங்கா சுக்லா கூறுகையில், ‘பைன்சகன்ஹர் கிராமத்தை சேர்ந்த முதியவர் ஷேர் சிங் ஹெட்கோவுக்கு சரியாக வாய் பேச முடியாது. அதனால் அவரது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்காமல் விட்டுவிட்டனர்.

தற்போது வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதால், விடுபட்ட வாக்காளர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன. அதன்படி முதியவரின் பெயரும் சேர்க்கப்பட்டது. அதேபோல் அந்தகர், பானுபிரதாப்பூர் தொகுதிகளை சேர்ந்த பல மூத்த குடிமக்களின் பெயர்களும் சேர்க்கப்பட்டன. அவர்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் முதன் முறையாக வாக்களிப்பார்கள்’ என்றார்.

The post வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காத நிலையில் முதன்முறையாக வாக்களிக்கும் 93 வயது முதியவர்: சட்டீஸ்கர் தேர்தல் அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Tags : Chhattisgarh ,Kangar ,Chhattisgarh assembly election ,Dinakaran ,
× RELATED சத்தீஸ்கர் அருகே துப்பாக்கி வெடிமருந்து ஆலை விபத்தில் ஒருவர் பலி..!!