×

மலையாள இயக்குனர் கே.ஜி. ஜார்ஜ் மறைவிற்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல்

சென்னை: மலையாள சினிமாவில் பழம்பெரும் இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவர் கே.ஜி.ஜார்ஜ் (78). பஞ்சவடிப்பாலம், இரகள், யவனிகா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக 1998ல் வெளியான இலவங்கோடு தேசம் என்ற படத்தை இயக்கினார். அவரது மனைவி சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

இதனால் கே.ஜி. ஜார்ஜ் கொச்சியில் உள்ள ஒரு முதியோர் காப்பகத்தில் வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று காலை அங்கு கே.ஜி.ஜார்ஜ் திடீரென மரணமடைந்தார். கே.ஜி. ஜார்ஜின் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது “மலையாளத் திரையுலகின் புதிய அலை இயக்குனர்களுள் ஒருவரான கே.ஜி. ஜார்ஜ் மறைந்தார். இரகள், ஸ்வப்னாடனம், மற்றொராள், ஊழ்க்கடல், மேளா, யவனிகா உள்ளிட்ட பல முக்கியமான திரைப்படங்களைத் தந்தவர். மலையாள சினிமா தொழில்நுட்பக் கலைஞர்கள் கூட்டமைப்பினை உருவாக்கி அதன் தலைவராகவும் பங்களிப்பாற்றினார்.

கே.ஜி. ஜார்ஜ் பெற்ற தேசிய விருதுகளும், மாநில விருதுகளும் அவரது திறமைக்குச் சான்று. இலக்கியத்திற்கு மட்டுமே அளிக்கப்பட்டு வந்த உயரிய விருதான முட்டத்துவர்க்கி விருது, ‘இரகள் திரைக்கதையும் ஓர் இலக்கிய வகைமையே’ எனும் குறிப்புடன் அவருக்கு வழங்கப்பட்டது. தனித்துவம் மிக்க இயக்குனருக்கு எனது அஞ்சலி” என தெரிவித்துள்ளார்.

The post மலையாள இயக்குனர் கே.ஜி. ஜார்ஜ் மறைவிற்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : K. GG ,Kamalhassan ,George ,Chennai ,K. GG George ,Panchavadidytaram ,Vigara ,Yavanika ,
× RELATED உலகின் மிக வயதான ஒட்டிபிறந்த இரட்டை சகோதரிகள் மரணம்..!!