
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கர்நாடக
- டிரக் உரிமையாளர்கள் சங்கம்
- சென்னை
- டிரக் உரிமையாளர்கள் சங்கம்
- தின மலர்
சென்னை: தமிழகத்திலிருந்து கர்நாடக வழியாக செல்லும் லாரிகளை இயக்க வேண்டாம் என்று லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. கர்நாடகாவில் நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் லாரி உரிமையாளர் சம்மேளனம் அறிவுறுத்தியுள்ளது. வட மாநிலங்களுக்கு சென்று திரும்பும் லாரிகளை ஆங்காங்கே பாதுகாப்பாக நிறுத்தி வைக்கவும் சம்மேளனம் அறிவித்துள்ளது.
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரமானது கர்நாடகா மற்றும் தமிழகம் இடையே பெரும் விவாத பொருளாக மாறி உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தங்களுக்கு தரவேண்டிய தண்ணீரை தரவில்லை என்று தமிழக தரப்பும், தங்களிடம் போதிய அளவு தண்ணீர் இல்லை, குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லை என்ற வாதத்தை கர்நாடக அரசும் முன்வைத்து வருகின்றன. இந்த விவகாரம் காவிரி ஒழுங்காற்று மையம், காவிரி மேலாண்மை வாரியம் தாண்டி உச்சநீதிமன்றம் வரை சென்றது. உச்சநீதிமன்றமானது காவிரி மேலாண்மை வாரிய உத்தரவை பின்பற்ற கர்நாடகா அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில் நாளை கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக மாநில முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழக லாரிகள் உரிமையாளர் சங்கம் புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதாவது, நாளை கர்நாடக செல்லும் எந்த லாரிகளும் தற்போது அங்கு செல்ல வேண்டாம் என்றும் கர்நாகா வழியாக வட மாநிலங்களுக்கு செல்லும் லாரிகளும் ஆங்காங்கே பாதுகாப்பாக நிறுத்தப்பட வேண்டுமென்றும் லாரிகள் உரிமையாளர் சம்மேளன தலைவர் தனராஜ் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் தமிழ்நாடு பதிவெண் கொண்ட லாரிகள் தாக்கப்பட்டது பெரும் சர்ச்சையாகி உள்ளது. இதன் காரணமாக நாளைய தினம் கர்நாடகவுக்கு எந்த லாரிகளும் இயக்கப்படாது எனவும், தமிழகம் கர்நாடகம் மாநில எல்லையில் இந்த லாரிகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட வேண்டும் எனவும் தமிழ்நாடு லாரிகள் சங்க சம்மேளன தலைவர் அறிவித்துள்ளார்.
The post தமிழகத்திலிருந்து கர்நாடக வழியாக செல்லும் லாரிகளை இயக்க வேண்டாம்: லாரி உரிமையாளர் சம்மேளனம் அறிவிப்பு appeared first on Dinakaran.