×

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 3 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்தார் அஸ்வின்

இந்தூர்: நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2 ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வடிவிலான 48 போட்டிகளில் 144 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்தார்.

உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் 5ம் தேதி இந்தியாவில் தொடங்க உள்ளது. அதற்கு ஆயத்தமாகும் வகையில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டி கடந்த 22ம் தேதி மொஹாலியில் நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 276 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 281 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் 1 விக்கெட் மட்டுமே கைப்பற்றியிருந்தார்.

தொடரின் 2வது ஒருநாள் போட்டி நேற்று இந்தூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தனர். சுப்மன் கில் (104), மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் (105) ஆகியோர் சதமடிக்க, சூர்யகுமார் யாதவ் (72) மற்றும் கேப்டன் கே.எல்.ராகுல் (52) ஆகியோர் அரைசதம் விளாசினார். இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 399 ரன்களை குவித்தது. இந்திய அணி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் அடித்த அதிகபட்ச ஸ்கோராகவும் இது அமைந்தது.

400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறுது நேரத்தில் மழை குறுக்கிட்டதால் டக்வோர்த் லூயிஸ் விதிப்படி ஆஸ்திரேலிய அணி 33 ஓவர்களில் 317 ரன்கள் எடுத்தால் வெற்றி என நிர்ணயிக்கப்பட்டது. இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணி இந்திய அணியின் அபார பந்துவீச்சால் 217 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இப்போட்டியில் அஸ்வின் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வடிவிலான 48 போட்டிகளில் 144 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்தார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்களில் முன்னாள் வீரரான அனில் கும்ப்ளே 2ம் இடத்திற்கு தள்ளப்பட்டார். அனில் கும்ப்ளே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 20 டெஸ்ட் போட்டிகளில் 111 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 29 ஒருநாள் போட்டிகளில் 31 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

The post ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 3 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்தார் அஸ்வின் appeared first on Dinakaran.

Tags : Ashwin ,Kumble ,Australia ,Ravichandran Ashwin ,Dinakaran ,
× RELATED சட்டக் கல்வியை 5 ஆண்டுகளில் இருந்து 3...