×

பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா

*ஆண்டு விழாவையொட்டி 2500 மரக்கன்றுகள் நடவு

வாணியம்பாடி : வாணியம்பாடி அருகே பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடந்தது. அதில் முதலாம் ஆண்டு விழாவையொட்டி 2500 மரக்கன்றுகள் நடப்பட்டது.தமிழ்நாட்டில் காடுகளின் பரப்பை அதிகரிக்கும் நோக்கத்தில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார். தமிழகத்தில் வனப்பரப்பை 23.7 சதவிகித்தில் இருந்து 33 சதவிகிதமாக உயர்த்தும் நோக்கோடு, பசுமை தமிழ்நாடு இயக்கம் என்ற திட்டத்தை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் 10 ஆண்டுகளுக்குள் 260 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மரம் வளர்ப்பிற்கு ஊக்குவிப்பது இவ்வியக்கத்தின் முக்கிய நோக்கமாகும். இதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட பகுதிகளிலும் அரசியல் கட்சியினர் தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் என பலதரப்பட்டோர் மரக்கன்றுகளை நடவு செய்து வருகின்றனர்.

பசுமை தமிழ்நாடு இயக்கம் துவங்கி ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி நேற்று தமிழகம் முழுவதும் தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்ற பசுமை திட்டம் மற்றும் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் முதலாம் ஆண்டு பசுமை தமிழ்நாடு இயக்க விழா கொண்டாடப்பட்டது.

அதன்படி, திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மாபெரும் மரம் நடும் விழா நேற்று நடைபெற்றது. இதில், 2 ஆயிரத்து 500 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மண்டல வனப்பாது காவலர் சுஜாதா கலந்துகொண்டு மரக்கன்றுகளை நடவு செய்து பணியை துவக்கி வைத்தார்.

இதில் திருப்பத்தூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆலங்காயம், ஆம்பூர் மற்றும் சிங்காரப்பேட்டை வனச்சரங்கங்களை சேர்ந்த வனச்சரகர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்கள், வாணியம்பாடி வட்டாட்சியர் சாந்தி, திருப்பத்தூர் திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா appeared first on Dinakaran.

Tags : Sapling Planting Ceremony ,Green Tamil Nadu Movement ,Vaniyambadi: ,Vaniyambadi ,Dinakaran ,
× RELATED மரக்கன்று நடும் விழா