×

திருப்பத்தூர் மீன் மார்க்கெட்டில் நேற்று புரட்டாசி மாதத்தையொட்டி மீன்கள் விற்பனை குறைந்தது

*வரத்து அதிகரிப்பால் விலை சரிவு

திருப்பத்தூர் : திருப்பத்தூரில் மீன் மார்க்கெட்டில் புரட்டாசி மாதம் தொடங்கப்பட்டதால் மீன்கள் விற்பனை குறைந்தது. மேலும் மீன்கள் வரத்து அதிகரிப்பால் விலை குறைந்து காணப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 6 ஒன்றியங்களில் 208 ஊராட்சிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரி, குளம், குட்டைகள் உள்ளது. இங்குள்ள நீர்நிலைகள் ஏலம் விடப்பட்டு வாரம்தோறும் மீன்கள் பிடிக்கப்பட்டு திருப்பத்தூரில் உள்ள மீன் மார்க்கெட்டிற்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், சென்னை, விசாகப்பட்டினம், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் கடல் மீன்களும் திருப்பத்தூருக்கு வருகிறது. இங்கிருந்து ஜிலேபி, கெண்டை, ரோகு, கட்லா, பாப்புலேட் உள்ளிட்ட மீன் வகைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.இந்நிலையில் புரட்டாசி மாதத்தினையொட்டி நேற்று திருப்பத்தூர் மீன் மார்க்கெட்டில் மீன்களின் விலை குறைந்து காணப்பட்டது. மேலும் மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் பிடிக்கப்பட்ட பாப்புலேட் உள்ளிட்ட மீன்கள் கிலோ ₹80 முதல் ₹100 வரை விற்கப்பட்டது. அதேபோல் ₹200க்கு விற்பனை செய்த ரோகு, கட்லா உள்ளிட்ட மீன்கள் ₹150க்கும்விற்பனை செய்யப்பட்டது.

கடல் மீன்கள் வரத்தும் அதிகரித்துள்ளதால் ₹500க்கு விற்கப்பட்ட சங்கரா மீன் ₹200க்கும், ₹1000த்திற்கு விற்கப்பட்ட வஞ்சிரம் மீன் 250க்கும், 500க்கு விற்கப்பட்ட இறால் ₹200க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மீன்கள் வரத்து அதிகரிப்பால் திருப்பத்தூர் மீன் மார்க்கெட்டில் மீன்கள் குவிந்துள்ளது. புரட்டாசி மாதம் என்பதால் மீன் மார்க்கெட் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

The post திருப்பத்தூர் மீன் மார்க்கெட்டில் நேற்று புரட்டாசி மாதத்தையொட்டி மீன்கள் விற்பனை குறைந்தது appeared first on Dinakaran.

Tags : Tirupattur ,Puratasi ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...