×

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பேச்சு வார்த்தையை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி திமுகவுடன் தொடங்கியது

சென்னை: நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பேச்சு வார்த்தையை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி திமுகவுடன் தொடங்கியது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுடன் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதற் மொய்தீன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலை இணைந்து எதிர்கொள்வது குறித்து அண்ணா அறிவாலயத்தில் தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள். 2019ல் திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக் சார்பில் ராமநாதபுரத்தில் நவாஸ் கனி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பிரதான அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் வேலைகளை தற்போதே ஆரம்பித்துள்ளன. இன்னும் 5,6 மாதங்களே உள்ளதால் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தேசிய அளவு தொடங்கி, மாநில அளவில் தொடர்ந்து வருகிறது . தமிழகத்தை பொறுத்தவரை ஆளும் திமுக கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக, முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடப்பெற்றுள்ளன. இந்த கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தையை திமுக தலைவர்கள் தற்போது தொடங்கி உள்ளனர்.

இன்று திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இந்திய முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் , திமுக மூத்த நிர்வாகிகளை சந்தித்து பேசியுள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது திமுக கூட்டணி கட்சி சார்பாக இந்தியா முஸ்லீம் லீக் கட்சியில் இருந்து நவாஸ் கனி போட்டியிட்டு வெற்றி பெற்றார் . இந்த முறை வேலூர் மக்களவை தொகுதி இந்திய முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பாஜக போட்டியிடும் என்றும், அதுவும் பாஜக சார்பாக பிரதமர் மோடி போட்டியிட வாய்ப்பு உள்ளது எனவும் கடந்த சில மாதங்களாகவே பேச்சுக்கள் அடிபடுகின்றன. அதனால் ராமநாதபுரத்தில் திமுக நேரடியாக போட்டியிட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. வரும் வாரங்களில் மதிமுக, இடதுசாரிகள், விசிக, கொங்கு மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பேச்சு வார்த்தையை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி திமுகவுடன் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Indian Union Muslim League party ,DMK ,Lok Sabha elections ,CHENNAI ,General ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED ஹாட்ரிக் மாநில வெற்றியால் பா.ஜ தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி பேச்சு