×

உலக கோப்பையில் களம் இறங்க ஆர்வமாக இருக்கிறோம்: கேப்டன் கே.எல்.ராகுல் பேட்டி

இந்தூர்: இந்தியா-ஆஸ்திரேலியா இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் இந்தியா வெற்றிபெற்ற நிலையில் 2வது போட்டி நேற்று இந்தூரில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணியில் ஸ்ரேயாஸ் 105, சுப்மன்கில் 104, சூர்யகுமார் 72 ரன் விளாச இந்தியா 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 399 ரன் குவித்தது. பின்னர் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு மழையின் குறுக்கீடு காரணமாக 33 ஓவரில் 317 ரன்னாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 28.2 ஓவரில் 217 ரன்னுக்கு ஆஸ்திரேலியா ஆல்அவுட் ஆனது. இதனால் 99 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 2-0 என தொடரை கைப்பற்றியது. ஸ்ரேயாஸ் அய்யர் ஆட்டநாயகன் விருது பெற்றார். வெற்றிக்கு பின் கேப்டன் கே.எல்.ராகுல் அளித்த பேட்டி: “400 ரன்கள் எடுத்தது நம்பிக்கை அளித்தது.

ஆனால் உண்மையில் நாங்கள் இதற்கு திட்டமிடவில்லை. ஆடும் லெவனில் தேர்வு செய்யப்பட்ட அனைவரும் தங்கள் வேலையை செய்கின்றனர். இதனால் அணியை தேர்வு செய்வது கேப்டனுக்கும், பயிற்சியாளருக்கு தலைவலிதான். நாங்கள் சில கேட்ச்களை தவறவிட்டோம். ஆனால் மின் ஒளியின் கீழ் பீல்டிங் செய்வது உடல்ரீதியாக சவாலானது. வீரர்களை உடல்ரீதியாக தகுதியாக வைக்க பயிற்சியாளர்கள் தங்களால் முடிந்ததை செய்கிறார்கள். ஆனால் சில நேரம் தவறு நடக்கத்தான் செய்யும். தவறுகளில இருந்து கற்றுக் கொள்வோம். உலகக் கோப்பைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தயாராக இருக்கிறோம். அந்த சவால்களுக்கு பழகிக் கொள்ள, களத்தில் இறங்க ஆர்வமாக இருக்கிறோம், என்றார்.

ஆட்டநாயகன் விருது பெற்ற ஸ்ரேயாஸ் அய்யர் கூறுகையில், “எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மற்றும் அணியினர் எனக்கு ஆதரவாக இருந்தனர். காயத்தின்போது நான் டிவியில் போட்டிகளை பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் நான் அணிக்குள் வந்து விளையாட விரும்பினேன். என்னை நம்பியதற்கு நன்றி. இன்று எனது திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த முடிந்ததில் மகிழ்ச்சி. நான் பேட்டிங் செய்ய சென்றபோது எதையும் சிக்கலாகிக்கொள்ள விரும்பவில்லை. அணிக்கு என்ன தேவையோ அந்த இடத்தில் நான் பேட்டிங் செய்ய தயாராக இருக்கிறேன். கோஹ்லி சிறந்த பேட்ஸ்மேன். அவரிடமிருந்து அந்த மூன்றாவது இடத்தை பறிக்க வாய்ப்பே கிடையாது’’ என்றார்.

முதல் இடத்தை நெருங்கிய கில்

ஐசிசி ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 857 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், சுப்மன்கில் 814 புள்ளியுடன் 2வது இடத்திலும் உள்ளனர். ஆஸி.க்கு எதிரான முதல் போட்டியில் அரைசதம், நேற்று சதம் விளாசிய கில், கடைசி போட்டியில் 30 ரன் அடித்தால் பாபர் அசாமை பின்னுக்கு தள்ளி முதல் இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது.

The post உலக கோப்பையில் களம் இறங்க ஆர்வமாக இருக்கிறோம்: கேப்டன் கே.எல்.ராகுல் பேட்டி appeared first on Dinakaran.

Tags : World Cup ,Captain KL Rahul ,India ,Australia ,Dinakaran ,
× RELATED வரலாற்றில் முதல் முறையாக ஐசிசி 20 ஓவர்...