×

நிலம் மற்றும் நீர்நிலைகள் என அனைத்தையும் கடுமையாக பாதிக்கிறது பாலித்தீன் பைகளை தடுக்க கண்காணிப்பு அவசியம்

*எதிர்காலம் குறித்து சிந்திக்க வேண்டும்

*சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

மதுரை : நிலம் மற்றும் நீர்நிலைகள் உள்பட பல்வேறு பகுதிகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும், பாலித்தீன் பைகளின் பயன்பாட்டினை தடுக்க தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது எடை குறைந்த மைக்ரான் கொண்ட பாலித்தீன் பைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இவை நிலத்தை மட்டும் பாதிக்காமல் கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் கடல்வாழ் தாவரங்களின் இனப்பெருக்கத்தையும் பாதித்துள்ளன. பாலித்தீன் பைகள் என்பது பாலித்தீன் எனும் வேதியியல் பொருளை கொண்டு உருவாக்கப்படுகிறது. இவற்றை மனிதன் பயன்படுத்துவதால் பல்வேறு நோய்களுக்கு ஆளாக நேரிடுகிறது. இதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை செயல்படுத்தினார்.

பொதுமக்கள் கடைகளுக்கு செல்லும் போது கேரி பேக்கை தவிர்த்து, மஞ்சப்பை கொண்டு செல்ல வேண்டும் என்றும், மீண்டும் மஞ்சப்பை திட்டம் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதையடுத்து பெரிய கடைகளுக்கு பொதுமக்கள் செல்லும் போது, அவர்களுக்கு அங்கேயே ரூ.10, ரூ.20க்கு பைகள் வழங்கப்பட்டு பொருட்கள் கொடுத்து அனுப்பப்படுகிறது. பெரிய வணிக வளாகங்கள், இதர பெரிய கடைகளில் இத்தகைய முறை பின்பற்றப்படுகிறது.

இதுபோன்ற எடை குறைந்த பாலித்தீன் பொருட்கள் பயன்பாட்டினை தவிர்க்கும் நடவடிக்கையாக விழிப்புணர்வு பேரணிகள், வீடுதோறும் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு என தனியாக தொட்டிகள், அதிரடி ரெய்டுகள் என அவ்வப்போது நடக்கிறது. எடை குறைந்த பாலித்தீன் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிறிய ஓட்டல்கள், டீ கடைகள், காய்கறி கடைகள் போன்றவற்றில் இன்னமும் பாலித்தீன் பைகளின் பயன்பாடு தொடர்கிறது.

இந்த பாலித்தீன் பைகள் சூடான உணவு பொருட்களை பார்சலாக கொண்டு செல்லவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஓட்டல்களில் பிளாஸ்டிக் பேப்பர் மீது உணவுகளை பரிமாறுகிறார்கள். அதுவும் சூடான தேநீர், உணவுகளை பிளாஸ்டிக் மீது பயன்படுத்துவதால், அது பொதுமக்களின் உடல் ஆரோக்கியம் மீது பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதையறியாமல் பல உணவகங்கள் மற்றும் டீ கடைகளில் பாலித்தீன் பைகள் பார்சல்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. பாலித்தீன் பைகளில் சூடான உணவுகளை பயன்படுத்துவதால், அதிலிருக்கும் கண்ணுக்கு தெரியாத நச்சுத்தன்மை கொண்ட ரசாயன பொருட்கள் உருகி உணவு பொருட்களுடன் கலந்து அவற்றை உண்போருக்கு பலவிதமான நோய்களை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இதேபோல், பொருட்கள் வாங்கி வரும் பாலித்தீன் பைகள் ஆங்காங்கே வீசப்படுகின்றன. இவை மட்கும் தன்மை இல்லாதவை என்பதால் மொத்தமாக சேர்ந்து மண்ணை பாழாக்கி வருகிறது. எங்கள் பகுதியில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சி நிர்வாகம் அதனை முறையாக சுத்தம் செய்வதில்லை என்று பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். ஆனால் அந்த கால்வாயில் அடைப்பு ஏற்படுவதற்கு காரணமாக இருப்பதே, அதில் அதிக அளவில் சேர்ந்திருக்கும் பாலித்தீன் பைகளாக இருக்கிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பணியாளர்கள் வந்து கால்வாய் அடைப்பை சீரமைக்கும் போது கிலோக்கணக்கில் பாலித்தீன்பைகள் எடுத்து அகற்றப்படுகிறது.

இந்த பாலித்தீன் பைகளை தீவைத்து எரிக்க மட்டுமே முடியும். அப்படி எரிப்பதால் அதிக அளவில் நச்சுத்தன்மை நாம் சுவாசிக்கும் காற்றில் பரவுகிறது. இதுபோன்ற எடை குறைவான பாலித்தீன் பைகளை மறுசுழற்சி செய்ய இயலாது என்பதால், குப்பைகளில் இருந்து பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் போன்றவற்றை எடுத்து விற்பனை செய்வோருக்கும் பயன்படாததாக உள்ளது. இதுபோன்ற பாலித்தீன் பைகள் உற்பத்தி மற்றும் பயன்பாட்டுக்கு ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. ஆனால் திருட்டுத்தனமாக அவற்றை உற்பத்தி செய்வதுடன், குறைந்த விலை என்று கூறி வியாபாரிகளிடம் ஒப்படைக்கின்றனர். அவர்கள் விற்பனை செய்யும் பொருட்களை அந்த பைகளில் வைத்து வழங்குகின்றனர். அவற்றை பெறும் பொதுமக்கள் பொருட்களை எடுத்துக்கொண்டு பைகளை வீடுகளுக்கு வெளியே வீசுகின்றனர்.

இதுபோல் சேரும் பாலித்தீன் பொருட்கள் மண்ணின் தன்மையை மாற்றுவதாக இருக்கிறது. எந்த காலத்திலும் மட்கும் தன்மை இல்லாத இவற்றால் எதிர்கால சந்ததியினருக்கு பேராபத்து காத்திருக்கிறது என்பதை மக்கள் உணர வேண்டும். இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது: பொதுவாக பிளாஸ்டிக் குடங்கள், வாளிகள் உள்ளிட்ட பொருட்கள் தற்போது அதிகம் பயன்பாட்டில் உள்ளன. மறுசுழற்சி செய்ய முடியும் என்பதால், இவற்றால் இயற்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. ஆனால் குறைந்த மைக்ரான் கொண்ட பாலித்தீன் பைகளால் பேராபத்து காத்திருக்கிறது. நாம் நம் குழந்தைகளுக்காக வாழ்கிறோம். அவர்களுக்கு குழந்தைள் பிறக்கும்போது பேரன், பேத்தி பிறந்துவிட்டதாக எல்லையில்லா மகிழ்ச்சியடைகிறோம். அதேபோல், சந்ததி தொடரும் என்பது நம்முடைய நம்பிக்கையாக இருக்கிறது. அவர்களுக்காக சொத்துக்களை சேர்த்து வைக்கிறோம்.

அப்படி இருக்கும்போது, எதிர்காலத்தில் நம் சந்ததியினருக்கே இந்த பாலித்தீன் பைகளால் பெரும் ஆபத்து காத்திருக்கிறது என விஞ்ஞானிகள் கூறுவதை ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். கடலில் சேர்ந்திருக்கும் பாலித்தீன் பைகள் அடிக்கடி அகற்றப்படுகின்றன. இதனால், உப்பூநீரிலும் மட்காத தன்மை உடையவை இவை என்பது தெளிவாகிறது. மேலும், இவை தொடர்ந்து சேரும்போது, மண்ணும் தன் இயல்பான தன்மையை இழக்கும்.

இதனால் விவசாயம் என்பதும் கேள்விக்குறியாகும். எதிர்காலத்தில் மிகப்பயங்கர ஆபத்துகளை விளைவிக்க காத்திருக்கும் இந்த பாலித்தீன் பைகளை நாம் இப்போது முதல் முழுமையாக ஒதுக்க முன்வர வேண்டும். கடைகளில் அவற்றை கொடுத்தால் வாங்காமல், வீட்டில் இருந்து துணிப்பைகளை எடுத்துச்செல்லுங்கள். இதன் வாயிலாக மட்டுமே நம் எதிர்கால சந்ததிகளுக்கு ஏற்பட காத்திருக்கும் பிரச்னையை முழுமையாக தீர்க்க முடியும்.

The post நிலம் மற்றும் நீர்நிலைகள் என அனைத்தையும் கடுமையாக பாதிக்கிறது பாலித்தீன் பைகளை தடுக்க கண்காணிப்பு அவசியம் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Dinakaran ,
× RELATED நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற வழக்கு