
*வரத்து குறைவால் விலை அதிகரிப்பு
வேலூர் : வேலூர் மீன் மார்க்கெட்டில் புரட்டாசி மாதம் எதிரொலியால் மீன்கள் மந்தமாக இருந்தது. மேலும் மழையின் காரணமாக வரத்து குறைந்ததால் விலை அதிகரித்துள்ளது.
வேலூர் மீன் மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் நாகப்பட்டினம், மங்களூரு, கோழிக்கோடு, கார்வார் போன்ற இடங்களில் இருந்து மீன்வரத்து உள்ளது. வேலூர் புதிய மீன் மார்க்கெட்டில் நள்ளிரவு 2 மணிக்கு மேல் மீன் மொத்த வியாபாரமும், காலை 6 மணிக்கு மேல் சில்லறை வியாபாரமும் நடைபெறுகிறது.
திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள் ஒன்றுக்கு 50 டன் வரை மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் 50 முதல் 70 டன் மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. காலை முதல் இரவு வரை சில்லறை விற்பனை நடக்கிறது.இந்நிலையில் தமிழ் மாதத்தில் புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது.
இந்த மாதத்தில் பெரும்பாலானோர் இறைச்சி உண்ணுவதை தவிர்த்து சனிக்கிழமை தோறும் பெருமாளை தரிசிப்பது வழக்கம். இதனால் புரட்டாசி மாதம் முழுவதும் ஆட்டுக்கறி, கோழிக்கறி, மீன்கள் விற்பனை மந்தமாக இருக்கும். ஆவணி மாதம் கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவு பெற்றது. இதனால் அன்றைய தினம் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இதற்கிடையில் புரட்டாசி மாதம் பிறப்புக்கு பின்னர் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இறைச்சி கடைகளில் கூட்டம் குறைவாக காணப்பட்டது. வேலூர் மீன் மார்க்கெட்டிலும் விற்பனை மந்தமாக இருந்தது.
மேலும் கேரளாவில் கன மழை காரணமாக மீன்கள் வரத்து குறைந்து காணப்பட்டது. வழக்கமாக 3 லோடுகள் வரும். ஆனால் நேற்று 2 லோடுகள் மட்டுமே மீன்கள் விற்பனைக்கு வந்தது.
இதனால் விலை அதிகமாக காணப்பட்டது. இருப்பினும் விற்பனை மந்தமாக இருந்ததால் வெறிச்சோடியது. கடந்த வாரத்தை விட ஒரு சில மீன்களின் விலை சற்று உயர்ந்திருந்தது.
வஞ்சிரம் கிலோ ₹1,200, சின்ன வஞ்சிரம் ₹400 வரையும், சீலா(சிறியது) ₹200, தேங்காய் பாறை ₹400, சங்கரா ₹300, அயிலமீன் ₹160, நெத்திலி ₹300 வரை, இறால் ₹500 வரையும், கருப்பு வவ்வால் பெரியது ₹700, சலமின் ₹750, முரல் ₹400க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், மாவட்டத்தில் பிரியாணி கடைகள் மற்றும் அசைவ உணவகங்களில் அசைவ உணவு வகைகள் விற்பனையும் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
The post வேலூர் மீன் மார்க்கெட்டில் புரட்டாசி எதிரொலியால் மீன்கள் விற்பனை மந்தம் appeared first on Dinakaran.