×

ஈச்சங்கோட்டை கால்நடை பண்ணை வளாகத்தில் ஒரே நேரத்தில் 2,500 மரக்கன்றுகள் நடவு

*வன பரப்பளவை அதிகரிக்க நடவடிக்கை

*15 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் வன பரப்பின் சதவீதத்தை விரிவுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், ஈச்சங்கோட்டை கால்நடை பண்ணை வளாகத்தில் நேற்று ஒரே நேரத்தில் 2,500 மரக்கன்றுகள் நட்டனர்.தமிழ்நாடு வனத்துறை, தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்துக்கான பசுமை திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தில் வனபரப்பு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஈச்சங்கோட்டை உயரிய கால்நடை பெருக்கு பண்ணை வளாகத்தில் பள்ளி மாணவ, மாணவிகள், தொண்டு நிறுவனங்கள், அரசு அலுவலர்கள் இணைந்து ஒரே நேரத்தில் 2,500 மரக்கன்றுகள் நட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 10 சதவீதமாக உள்ள வன பரப்பு அளவை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில் மாவட்ட வனச் சரக அலுவலர் அகில் தம்பி பேசியதாவது:தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மூலமாக இந்த ஆண்டு 15 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மரங்களை நாம் நடுவதால் இயற்கையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம்முடையதாகும்.

ஆனால் நாம் நம் சுயநலத்துக்காக மரங்களை வெட்டியும், காடுகளை அழித்தும் நம்மை நாமே அழித்து வருகிறோம். அடுத்த தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைத்தால் மட்டும் போதாது. அவர்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு நல்ல காற்று தேவை. அது மரங்களின் மூலம் தான் கிடைக்கும். உலகில் உயிர்கள் வாழ்வதற்கு மழை நீரே ஆதாரமாய் உள்ளது. அதற்கு மரங்கள் வளர்ப்பது முக்கியமாகும்.

மரங்கள் பூமிக்கும், மனிதனுக்கும் பல நன்மைகளை தருகின்றன. மரங்கள் மனித உயிர் வாழ்க்கைக்கு ஆதாரமாக விளங்குகின்றன. மனிதன் சுவாசிக்க காற்றை தருபவை மரங்களே. மனிதன் இளைப்பாற மரங்கள் நிழல் தருகின்றன. மரங்கள் வளிமண்டலத்துக்கு நீரை அனுப்பி, மழையை பொழியச் செய்கின்றன. சூரிய கதிர்வீச்சு, வேகமான காற்று போன்றவற்றில் இருந்து மனிதனை பாதுகாக்கின்றன.

நிலத்தடி நீரை பாதுகாக்கிறது. மரங்களின் இலை, வேர், தண்டு, பூ, காய், கனி ஏதோ ஒரு விதத்தில் மிகவும் பயன் தருகின்றன. பல்வேறு மரங்களின் இலைகள் வாசனை திரவியங்கள், மருந்துகள் போன்ற பல நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.மரங்கள் பூமிக்கு சிறந்த சொத்து. பூமியை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் மாற்றுவதற்கு மரங்கள் ஏராளமான பங்களிப்பை செய்கின்றன. விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் வாழ்விடமாக திகழ்கின்றன. நாம் பயன்படுத்தும் மேஜை, குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள், கட்டில் முதலான பல பொருட்களை உருவாக்கப் பயன்படுகின்றன. காய்கறிகள், தானியங்கள், பழங்கள் முதலானவற்றை தருகின்றன.

காய்ந்த மரங்கள் கூட எரிபொருளாகப் பயன்படுகின்றன. இதுபோன்ற தேவைக்கு மரங்கள் அழிக்கப்பட்டாலும் அதே எண்ணிக்கைக்கு கூடுதலாக மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட வேண்டும்.ஆனால் மரங்களின் முக்கியத்துவத்தை உணராமல், அவற்றை அழித்து வருகிறோம். கட்டுமானம், குடியிருப்பு அமைத்தல், தொழிற்சாலைகளை அமைத்தல், சாலை விரிவாக்கம், சாலைகள் அமைத்தல், விமான நிலையங்கள் அமைப்பது, சுரங்கப் பணிகள் உள்ளிட்ட பல நடவடிக்கைகளுக்காக மரங்கள் அழிக்கப்படுகின்றன.

பருவநிலை மாற்றம், மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கு மரங்களை நடுவது சிறந்த வழியாகும். எனவே நாம் அனைவரும் மரக்கன்றுகளை நட்டு வளர்ப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் கால்நடை துறை இயக்குநர் தமிழ்செல்வன், ஒரத்தநாடு சேர்மன் பார்வதி சிவசங்கர், ஊராட்சி மன்ற தலைவர் வீரமணி, பண்ணை மேலாளர் மணிமாறன், மருத்துவர்கள் கல்பனா, சுரேஷ்குமார், அன்புராஜா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post ஈச்சங்கோட்டை கால்நடை பண்ணை வளாகத்தில் ஒரே நேரத்தில் 2,500 மரக்கன்றுகள் நடவு appeared first on Dinakaran.

Tags : Echangottai Livestock Farm Complex ,Thanjavur ,Eichangottai ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...