×

கந்த சஷ்டி விழா: பழநி கோயிலில் சண்முகருக்கு திருக்கல்யாணம்

பழநி: சஷ்டி விழாவை முன்னிட்டு பழநி மலைக்கோயிலில் இன்று சண்முகர்-வள்ளி, தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை கிரி வீதிகளில் சூரர்களை, சின்னக்குமாரர் வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த 4ம் தேதி காப்புக் கட்டுதலுடன் துவங்கியது. கொரோனா காரணமாக இந்த ஆண்டும் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று மாலை நடந்தது. சூரசம்ஹாரத்தை முன்னிட்டு நேற்று பிற்பகல் 2.45 மணிக்கு மலைக்கொழுந்து அம்மனிடம் இருந்து, முருகன் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் மலைக்கோயிலில் இருந்து சின்னக்குமாரர் கிரிவீதி வந்தடையும் நிகழ்ச்சி, பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்து வள்ளி, தெய்வானை சமேதரராக முத்துக்குமார சுவாமி மங்கம்மாள் மண்டபம் வந்தடையும் நிகழ்ச்சி நடந்தது. கோயில் பணியாளர்கள் மற்றும் அர்ச்சகர்கள் தவிர மற்றவர்கள் சூரசம்ஹாரம் நடந்த இடங்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. மாலை 6 மணிக்கு வீரபாகு மற்றும் நவவீரர்கள் சமரசம் பேசும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய சின்னக்குமாரர், சூரர்களை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. வடக்கு கிரி வீதியில் தாரகாசூரன், கிழக்கு கிரி வீதியில் பானுகோபன், தெற்கு கிரி வீதியில் சிங்கமுகாசூரன் மற்றும் மேற்கு கிரி வீதியில் சூரபத்மனை சின்னமுத்துக்குமாரர் வதம் செய்தார். இன்று காலை 9.30 மணிக்கு மேல் தனுர் லக்னத்தில் மலைக்கோயிலில் வள்ளி, தெய்வானை சமேதரராக சண்முகர் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியிலும் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு வள்ளி, தெய்வானை சமேத சண்முகருக்கு 16 வகை அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது. பட்டாடை அணிவிக்கப்பட்டு, பல்வேறு ஆபரணங்கள் பூட்டப்பட்டன. தொடர்ந்து மாலை மாற்றுதல் போன்ற திருமண சடங்குகள் நடந்தன.  கோயில் தலைமை அர்ச்சக ஸ்தானீகர் அமிர்தலிங்கம் மற்றும் செல்வசுப்பிரமணியம் ஆகியோர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் திருமண சடங்குகள் மற்றும் பூஜைகளை செய்தனர். நிகழ்ச்சியில் பழநி கோயில் செயல் அலுவலர் நடராஜன், துணை ஆணையர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கடந்த 7 நாட்களாக சஷ்டி விரதம் இருந்த பக்தர்கள், தங்களது விரதங்களை முடித்துக் கொண்டனர். இன்று மாலை 6.30 மணிக்கு மேல் 7.30  மணிக்குள் பெரியநாயகி அம்மன் கோயிலில் வள்ளி, தெய்வானை சமேத  முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. சூரசம்ஹாரம்  மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் அனைத்தும் கோயில் யூடியூப் மற்றும்  வலைத்தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன. …

The post கந்த சஷ்டி விழா: பழநி கோயிலில் சண்முகருக்கு திருக்கல்யாணம் appeared first on Dinakaran.

Tags : Kanda Sashti Festival ,Shanmukur ,Palani Temple ,Palani ,Shanmukar-Valli ,Divana Thirukkalyana ,Bharani ,Sashti Festival ,Thirukalyanam ,Chanmukur ,
× RELATED பழநி கோயிலில் வைகாசி விசாக திருவிழா மே 16ல் துவங்குகிறது