×

ஆண்டு முழுவதும் கரும்பு சாகுபடி!

சவறு மண்ணில் சாதித்த அரசுப்பள்ளி ஆசிரியர்

ராமநாதபுரம் மாவட்டம் என்றாலே வானம் பாத்த பூமிதான். பருவமழை பெய்தால் மட்டும்தான் விவசாயம் நடக்கும். அதுவும் ஆண்டுக்கு ஒருபோகம் மட்டுமே. மாவட்டத்தின் பரவலான இடங்களில் நெல் விவசாயம் அதிகமாக செய்யப்படுகிறது. அதற் கடுத்தபடியாக மிளகாய், பருத்தி, சிறுதானியங்கள், பயிர் வகைகள், வாழை உள்ளிட்ட பழ வகைகள், காய்கறிகள் என அந்தந்த பகுதிக்கு ஏற்ற மண், தண்ணீரைப் பொறுத்து விவசாயம் செய்யப்படுகிறது. இத்தகைய சூழலில் ராமநாதபுரம் மாவட்டத்திலேயே முதன்முறையாக கரும்பு விவசாயம் செய்து அதில் நல்ல லாபம் பார்த்து வருகிறார் அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர்.கமுதி அருகே நெறிஞ்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துலிங்கம். பள்ளி ஆசிரியரான இவர் தனக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் கரும்பு விவசாயம் செய்து நல்ல மகசூல் எடுத்து வருகிறார். அந்தப் பகுதியில் கரும்பு விவசாயத்தை முதன்முதலில் கையில் எடுத்தவரும் இவர்தான். இவரைப் பார்த்து அவரது கிராமத்தில் இப்போது பலரும் கரும்பு சாகுபடிக்கு மாறியிருக்கின்றனர். ஒரு காலைப்பொழுதில் முத்துலிங்கத்தைப் பார்க்க சென்றிருந்தோம். கரும்பு வயலுக்கு நீர்ப் பாய்ச்சிக் கொண்டிருந்த முத்துலிங்கம், நம்மை வரவேற்று பேசத்தொடங்கினார்.

சிறுவயதில் இருந்தே பெற்றோருடன் வயலுக்கு சென்று, அவர்கள் வேலை செய்வதைப் பார்த்து வளர்ந்தவன் என்பதால், பத்தாம் வகுப்பு முடித்தவுடனேயே நானும் விவசாய வேலை செய்ய துவங்கிவிட்டேன். எங்கள் கிராமம் மலட்டாறு என்கிற ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது. இங்கு மிளகாய், பருத்தி அதிகமாக விளைவிக்கப்படுகிறது. இரண்டாம் கட்டமாகத்தான் நெல் பயிரிடப்படுகிறது. இதனால் எப்போதும் விவசாய பணிகள் நடந்து கொண்டே இருக்கும். எனக்கு இயற்கை விவசாயத்தில் ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாக 2016 முதல் 2018 வரை ஆர்கானிக் முறையில் உளுந்து, பயிர் வகைகள் பயிரிட்டேன். இயற்கை முறையில் பயிரிடுவதால் உற்பத்திச் செலவு அதிகமாகிறது. விளைபொருட்களை சரியான விலைக்கு விற்பனை செய்யமுடியாமல் இருந்தது. அதனால் அந்த விவசாயத்தை கைவிட்டுவிட்டேன். இதனைத் தொடர்ந்து கரிசல் மண் கொண்ட இந்த பகுதிக்கு, குறைந்த தண்ணீரில் வளரக்கூடிய பணப்பயிராகவும் இருக்க வேண்டும், அதே வேளையில் இப்பகுதிக்கு மாற்றுப்பயிராகவும் இருக்க வேண்டும் என யோசித்தேன். அப்போது கரும்பு விவசாயம் செய்யலாம் என முடிவெடுத்தேன். கடந்த நான்கு வருடங்களாக கரும்பு விவசாயம் செய்து வருகிறேன்.

10 ஏக்கர் நிலத்தில் 12 மாத பயிரான மஞ்சள் மற்றும் கரும்பு பயிரிட்டு இருக்கிறேன். கரும்பு ஒரு வருட பயிர் என்பதால் 3 மாதத்தில் அறுவடை செய்யும்படி 10 ஏக்கரை மூன்றாக பிரித்து வெவ்வேறு பருவத்தில் சுழற்சி முறையில் கரும்பு சாகுபடி செய்திருக்கிறேன். இப்படி செய்வதன் மூலம் இப்போது நிலத்தில் 3, 6 மற்றும் 9 மாதப் பருவத்தில் 3 விதமான கரும்புகள் ஒரே இடத்தில் இருக்கிறது. இப்படி செய்வதன் மூலம் ஒவ்வொரு மூன்று மாதமும் தொடர் வருமானம் பார்த்து வருகிறேன்.கரும்பு விவசாயத்தைத் தொடங்கும்போது சிவகங்கை மாவட்ட சக்தி கரும்பு ஆலையின் மூலம் கோயம்புத்தூர் பகுதியிலிருந்து விதைக் கரும்புகளை வாங்கி வந்து சாகுபடியில் ஈடுபட்டேன். கரும்பு விதைப்பதற்கு முன்பு ஒருமுறை நன்றாக மண்ணை உழ வேண்டும். எங்கள் பகுதியில் இருக்கிற மண்ணை ஒருமுறை உழுதால் 4 ஆண்டுகள் வரை உழத் தேவையில்லை. உழுது முடித்தவுடன் அடிஉரத்தை ஒரு ஏக்கருக்கு 50 கிலோ வீதம் இடவேண்டும். இப்படி உரம் கொடுத்த பிறகு கரும்பு விதைப்பருக்களை 90 செமீ இடைவெளி விட்டு 20 செ.மீ. ஆழத்தில் குழியில் சால் அமைத்து மண்ணால் பார் கட்டி நடவேண்டும். கரும்பு வளர வளர தண்ணீரும் அதிகமாக கொடுக்க வேண்டும். முதல் இரண்டு மாதத்தில் 20 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அடுத்தடுத்த மாதங்களில் 15 நாட்களுக்கு ஒருமுறையும், கரும்பின் பருவத்தை பார்த்து 10 நாட்களுக்கு ஒருமுறையும் தண்ணீர் விட வேண்டும்.

அதேபோல் தான் உரமும். கரும்பு விதைத்து மூன்று மாதங்கள் முடிந்தவுடன் கரும்புக்கு தேவையான யூரியா மற்றும் கலப்பு உரங்கள் கொடுக்க வேண்டும். அதாவது ஒரு ஏக்கரில் பயிரிட்டிருக்கிற கரும்புக்கு 50 கிலோ யூரியா கொடுக்க வேண்டும். அப்படி கொடுப்பதால் பயிர் நன்றாக செழித்து வளரும். பிறகு யூரியாவுக்கு அடுத்தபடியாக கலப்பு உரம் 50 கிலோ கொடுக்க வேண்டும்.

இந்த கலப்பு உரத்தில் மூன்று உரங்கள் சரிவிகிதத்தில் கலந்திருக்கும். இந்தக் கலப்பு உரம் கரும்பின் பருமனுக்கும், எதிர்ப்பு சக்திக்கும், வளர்ச்சிக்கும் நன்றாக உதவும். இதனை சரியான பருவத்தில் கொடுத்தால் கரும்பின் அடிப்பாகம் நல்ல பருமன் அடையும்.அதேபோல், இந்த உரங்கள் கொடுத்த அடுத்த மூன்று மாதம் கழித்து ஒரு ஏக்கருக்கு 50 கிலோ யூரியாவும், 50 கிலோ பொட்டாஷ்ஷும் கொடுக்க வேண்டும். இந்தப் பருவத்தில் யூரியா கொடுப்பதால் கரும்புக்கு நல்ல வளர்ச்சி ஊக்கியாக செயல்படும். அதேபோல பொட்டாஷ் கொடுப்பதன் மூலம் கரும்பின் பருமனும், எடையும் அதிகரித்து விளைச்சலின் மதிப்பைக் கூட்டுகிறது. கரும்பு விவசாயம் செய்வதற்கு போர்வெல் தண்ணீர் பயன்படுத்துகிறேன். போர்வெல் சவறு தண்ணீர் என்பதால், கசப்புத் தன்மை குறைவதற்காக முதலில் தண்ணீரை சிறு குட்டையில் விட்டு, அந்த பள்ளம் நிறைந்த வாய்க்கால்கள் வழியாக பயிர்களுக்கு கொடுக்கிறேன்.
இவ்வாறு கரும்பின் பருவத்திற்கு தகுந்தபடி சரியான முறையில் உரமும், நீரும் கொடுத்து வருவதால் எனது நிலத்தில் ஒரு ஏக்கருக்கு 55 முதல் 65 டன் மகசூல் கிடைக்கிறது.

சராசரியாக ஏக்கருக்கு 60 டன் மகசூல் கிடைக்கிறது. ஒரு டன் கரும்பு 3000 ரூபாய்க்கு விற்கப்படுவதால் ஏக்கருக்கு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் வருமானம் கிடைக்கிறது. இதில் உழவு, உரம், பராமரிப்பு, கரும்பு வெட்டும் இயந்திரம் என ஏக்கருக்கு 50 ஆயிரம் வரை செலவாகும். அதுபோக ஒரு ஏக்கருக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் வரை லாபம் கிடைக்கிறது. இதில் தண்ணீர் விடுதல், களை எடுத்தல், உரமிடுதல், பருவத்திற்கேற்றவாறு தோகைகளை உரித்து விடுதல் உள்ளிட்ட பணிகளை அனைத்தையும் நானே செய்து வருகிறேன். அப்படிச் செய்வதால்தான் எனக்கு இந்தளவு லாபம் கிடைக்கிறது. இந்தப் பணிகளுக்கு எல்லாம் ஆள் வைத்து வேலை பார்த்தால் ஏக்கருக்கு 80 ஆயிரம் வரை செலவாகும். அப்போது லாபம் குறையும் வாய்ப்பும் இருக்கிறது. கரும்பைப் பொருத்தவரை நோய்தாக்குதல் பெரும்பாலும் குறைவுதான். மாவுப்பூச்சி தாக்குதல் எப்போதாவது கரும்புக்கு வரும். மாவுப்பூச்சி தொல்லை இல்லாமல் இருக்க வேண்டுமென்றால் அக்னி வெயில் ஆரம்பிக்கும் காலத்தில் கரும்பு விவசாயத்தை தொடங்காமல் இருக்க வேண்டும். அப்படி செய்தால் வெப்பநிலை மாறுதல்கள் காரணமாக மாவுப்பூச்சி தொல்லை இருக்காது. இப்பகுதியில் மலட்டாறு இருப்பதால் சீமை கருவேல மரங்கள் நிறைந்து காடாக காட்சியளிக்கிறது. இங்கு காட்டுப்பன்றி அதிகம் காணப்படுவதால் கரும்புகளை சேதப்படுத்தி பெரும் சேதம் விளைவிக்கிறது. இதனை கவனத்தில் கொண்டு இங்குள்ள விவசாயிகளுக்கு காட்டுப்பன்றியை விரட்ட வேளாண் துறை வழிகாட்டினால் இன்னும் நல்ல மகசூல் எடுக்கலாம்’’ என கூறி முடித்தார்.
தொடர்புக்கு:
முத்துலிங்கம் – 94436 11164

The post ஆண்டு முழுவதும் கரும்பு சாகுபடி! appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Rashupalam School ,
× RELATED ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே 1...