×

வனத்துறையினர் தீவிர ரோந்து முக்கூருத்தி தேசிய பூங்காவிற்குள் அத்துமீறி நுழைந்தால் நடவடிக்கை

*முதுமலை துணை இயக்குநர் எச்சரிக்கை

ஊட்டி : முக்கூருத்தி தேசிய பூங்காவினுள் அத்துமீறி நுழைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதுமலை துணை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் அந்நிய நபர்கள் நடமாட்டம் உள்ளதா என்பதை கண்டறியஅடர்ந்த வனத்தில் 3 வனச்சரகர்கள் தலைமையில் துப்பாக்கி ஏந்திய வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கூருத்தி தேசிய பூங்கா முதுமலை புலிகள் காப்பகத்தின் கட்டுபாட்டில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. 78.4 சதுர கி.மீ., பரப்பளவில் அமைந்துள்ள இப்பூங்காவில் அழியும் பட்டியலில் உள்ள வரையாடுகள் அதிகளவு வாழ்கின்றன. இதுதவிர புலிகள்,யானை,சிறுத்தை,காட்டுமாடு,மான்கள் உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகளும், புல்வெளிகளும் உள்ளன. இப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.

இப்பகுதியில் வனத்துறையினர் 24 மணி நேரமும் வன ஊழியர்கள் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் பல்வேறு காரணங்களால் 10 புலிகள் உயிரிழந்தன. இதனால் முக்கூருத்தியில் வனவிலங்குகள் நடமாட்டம், அந்நிய நபர்கள் நடமாட்டம் உள்ளதா என்பது குறித்து கண்டறிய திடீர் ரோந்து பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதுமலை துணை இயக்குநர் வித்யா உத்தரவின் பேரில் வனச்சரகர்கள் யுவராஜ்குமார்(முக்கூறுத்தி), மனோஜ்குமார்(தெப்பக்காடு),கணேஷ் (நிலாக்கோட்டை)ஆகியோர் தலைமையில் அலுவலர்கள் தலைமையில் 45 கொண்ட குழுவினர் 4 குழுக்களாக பிரிந்து துப்பாக்கி ஏந்தியபடி ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இக்குழுவினர் கொட்டும் மழை மற்றும் பனிமூட்டத்தை பொருட்படுத்தாமல் முக்கூருத்தி தேசிய பூங்காவிற்கும், கேரளவின் சைலன்ட் வேலி தேசிய பூங்கா எல்லை பகுதியில் அமைந்துள்ள நாடுகாணி பகுதி, நீலகிரி வன கோட்ட எல்லையான கொலாரிபெட்டா, வெஸ்டன் கேட்ச்மென்ட் மற்றும் முக்கூருத்தி உச்சிமுனை ஆகிய நான்கு வழித்தடங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் குறித்தும் மற்றும் அந்நிய நபர்கள் நடமாட்டம் உள்ளதா கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது வரையாடு, காட்டுமாடு, சாம்பார் வகை மான்கள் நடமாட்டத்தை பார்த்துள்ளனர். மேலும் புலிகளின் காலடி தடம், எச்சம் உள்ளிட்டவற்றை பார்த்துள்ளனர். தமிழக – கேரள எல்லையான நாடுகாணி வழித்தடம், கொலாரிபேட்டை பகுதியில் வனங்களில் பொருத்தப்பட்டுள்ள தானியங்கி கண்காணிப்பு கேமராக்களில் வனவிலங்குகள் நடமாட்டம்,அந்நியர் நடமாட்டம் ஏதேனும் பதிவாகி உள்ளதாக ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் தேசிய பூங்காவிற்குள் அந்நியர்கள் நடமாட்டம் ஏதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் சில இடங்களில் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் வித்யா கூறியதாவது: முக்கூருத்தி தேசிய பூங்காவில் வனவிலங்குகளின் பாதுகாப்பு தொடர்பாக வனத்துறை சார்பில் தொடர்ச்சியாக ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடர்ந்த வனங்களில் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்து வனவிலங்குகள் நடமாட்டம் மற்றும் அந்நியர்கள் பிரவேசம் உள்ளனவா என்பது பற்றி கண்டறிந்து நாள்தோறும் தெப்பக்காடு புலிகள் கண்காணிப்பு மைய அலுவலகத்தில் ஆய்வு செய்யப்படுகிறது. வனப்பகுதியில் அத்துமீறி அந்நியர்கள், தனி நபர்கள் நுழைந்தால் வன சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

The post வனத்துறையினர் தீவிர ரோந்து முக்கூருத்தி தேசிய பூங்காவிற்குள் அத்துமீறி நுழைந்தால் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Mukuruthi National Park ,Mudumalai ,Deputy Director ,Warn Ooty ,
× RELATED தேன்வயல் கிராமத்தில் காட்டு யானைகள் அட்டகாசம்