×

சதுர்த்தி விழா கோலாகலம் நாகப்பட்டினம் கடலில் 114 விநாயகர் சிலைகள் கரைப்பு

*500 போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலம்

*பெரிய சிலைகள் படகில் ஆழ்கடலில் விசர்ஜனம்

நாகப்பட்டினம் : விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நாகப்பட்டினத்தில் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 114 விநாயகர்சிலைகள் புதிய கடற்கரையில் விசர்ஜனம் செய்யப்பட்டது.இந்து பண்டிகைளில் விநாயகர் சதுர்த்தி விழா நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்படும். விநாயகர் சதுர்த்தியன்று விதவிதமான விநாயகர் சிலைகள் கோயில் மற்றும் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டு மூன்று நாட்கள் சிறப்பு வழிபாடு செய்து பின்னர் அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைப்பதை பொதுமக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சக்தி விநாயகர் குழு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நாகப்பட்டினத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும். இவ்வாறு பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள் நகரின் பல்வேறு பகுதிகளில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் விசர்ஜனம் செய்யப்படும். இதன்படி சக்தி விநாயகர் குழு சார்பில் கடந்த 18ம் தேதி நாகப்பட்டினம், கீழ்வேளூர், சிக்கல், செல்லூர், பாலையூர், நாகூர் என பல்வேறு இடங்களில் விதவிதமான வகைகளில் 114 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இதுமட்டுமின்றி வீடுகளில் சிறிய அளவிலான சிலைகள் வைத்து பூஜித்தனர். இந்த விநாயகர் சிலைகளுக்கு தினமும் பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடு செய்து வந்தனர். முக்கிய இடங்களில் வைக்கப்பட்ட சிலைகளுக்கு போலீசார் பாதுகாப்பு பணியும் போடப்பட்டது.இந்நிலையில் 5 நாட்கள் பூஜிக்கப்பட்ட 114 விநாயர்கள் சிலைகள் அலங்கரிக்கப்பட்ட லோடு ஆட்டோக்களில் ஏற்றி நேற்று நாகப்பட்டினம் சவுந்திரராஜ பெருமாள் கோயில் முன்பு கொண்டு வரப்பட்டது.

அங்கு சக்தி விநாயகர் குழு சார்பில் சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் நாகப்பட்டினம் நகர் மன்ற தலைவர் மாரிமுத்து, சக்தி விநாயகர் குழு அமைப்பாளர் ஆதிமுருகன் மற்றும் பொதுமக்கள், இளைஞர்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து சவுந்திரராஜ பெருமாள் கோயில் வாசலில் மேளதாளம், மங்கள வாத்தியங்கள் முழங்க விநாயகர் ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியது.

எஸ்பி அலுவலகம், புதியபஸ்ஸ்டாண்ட், பப்ளிக் ஆபீஸ்சாலை, ஏழைப்பிள்ளையார் கோயில் வழியாக இரவு நாகப்பட்டினம் புதிய கடற்கரைக்கு வந்தது. வழிஎங்கும் பக்தர்கள் விநாயகர் சிலைகளுக்கு தேங்காய்களை உடைத்து வழிப்பட்டனர். புதிய கடற்கரைக்கு வந்த விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் விநாயகர் சிலைகள் படகுகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு ஆழ்கடலில் விசர்ஜனம் செய்யப்பட்டது. விநாயகர் சிலைகள் ஊர்வலம் புறப்பட்ட பகுதியான சவுந்திரராஜபெருமாள் கோயிலில் இருந்து புதிய கடற்கரை வரை எஸ்பி ஹர்ஷ்சிங் தலைமையில் திருச்சி, பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

The post சதுர்த்தி விழா கோலாகலம் நாகப்பட்டினம் கடலில் 114 விநாயகர் சிலைகள் கரைப்பு appeared first on Dinakaran.

Tags : Chaturthi Festival Kolagalam Nagapattinam 114 ,Ganesha ,Visarjanam Nagapattinam ,Ganesha Chaturthi festival ,Chaturthi festival Kolakalam Nagapattinam 114 ,Ganesha idols ,
× RELATED கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் அளவீடு