×

போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் விருத்தாசலம் ஒன்றியம்-நகராட்சியை இணைக்கும் சாலை

*சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை

விருத்தாசலம் : விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சி பகுதியை இணைக்கும் சாலையை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட மேட்டு காலனி பகுதியில் இருந்து க.இளமங்கலம், சாத்துக்குடல் வரை சுமார் 3 கிலோ மீட்டர் சாலை சேதமடைந்த நிலையில் இருந்து வந்தது. இதனால் இளமங்கலம், சாத்துக்குடல், தீவளூர் பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமமடைந்து வந்தனர்.

இதன் காரணமாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள 2 கிலோமீட்டர் சாலை 2022-2023 முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டுள்ளது.இந்த சாலையை தொடர்ந்து நகராட்சி பகுதியை இணைக்கும் சுமார் ஒரு கிலோமீட்டர் சாலை சீரமைக்கப்படாமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் இந்த சாலையை, சுமார் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல்வேறு அத்தியாவசிய தேவைகளுக்காகவும், விருத்தாசலத்தில் இருந்து பெண்ணாடம் செல்வதற்கும் பெண்ணாடத்தில் இருந்து விருத்தாசலம் வருவதற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் முதல் பல்வேறு பணிகளுக்கு செல்லும் அனைத்து பொதுமக்களும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சியளித்து வருவதுடன் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பலர் கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. ஆம்புலன்ஸ் வாகனம், தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட அனைத்து அவசர வாகனங்களும் செல்லும் இந்த சாலையை அப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு பருவமழை காலம் தொடங்குவதற்குள் விரைவில் சீரமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் விருத்தாசலம் ஒன்றியம்-நகராட்சியை இணைக்கும் சாலை appeared first on Dinakaran.

Tags : Vrudhasalam Union - Municipality ,Vrudhasalam ,Vrudchasalam ,Pruthasalam Union ,Dinakaran ,
× RELATED விருத்தாசலம், சிதம்பரத்தில் வடமாநில...