×

மண்டலா ஓவியத்தில் மாஸ் காட்டும் கீர்த்தனா!

‘மண்டலம் என்றால் வட்டம் எனப்படும். மண்டலா என்றால் வட்டமாக, அல்லது ஒரு மண்டலத்தை முழுமையாக அடைத்தால் போல் வரையப்படும் ஓவியங்கள்தான் மண்டலா ஓவியங்கள். பொதுவாகவே இவை கோவில்கள், தியான பீடங்கள், யோகா மையங்கள், ஆன்மீகத் தளங்கள், என இங்கே அதிகம் வரையப்படும். இந்திய மாடர்ன் குறியீடுகள் ஓவியம் என்பார்கள். இதைத்தான் மெஹந்தி, கோலங்கள், என எங்கும் பயன்படுத்துவதுண்டு. அதைக் கொண்டுதான் இன்னும் வித்யாசமாக சுவர் அலங்காரங்கள், கீ-செயின், மற்றும் டைனிங் டேபிள் டீ-கோஸ்ட்கள், டம்ளர் மூடிகள், என தனித்துவமாக பிஸினஸ் செய்துவருகிறார் கீர்த்தனா.

‘ எனக்கு மதுரைதான் சொந்த ஊர், பி.இ, கம்ப்யூட்டர் சைன்ஸ் முடிச்சிருக்கேன், அப்பா ராஜன் ஸ்டிக்கர் பிஸினஸ் செய்கிறார், அம்மா மஞ்சுளா ஹோம் மேக்கர். சின்ன வயதிலிருந்தே ஆர்ட் & கிராஃப்ட் வேலைகளில் அதிக ஆர்வம். அதன் காரணமாகவே நிறைய கைவினை வேலைகள் செய்திட்டே இருப்பேன். லீவு நாட்கள்கூட எதாவது சுவர் ஓவியங்கள், அலங்காரங்கள் இதுதான் எனக்கு பொழுதுபோக்கு. பொதுவாகவே இந்த பழமையான ஓவியங்கள், கோவில்களில் இருக்கும் ஓவியங்கள் மேலே ஆர்வம் உண்டு. எப்படியாவது கத்துக்கணும்ன்னு யோசிப்பேன். நிறைய ஆராய்ச்சி எல்லாம் கூட செய்வேன். இப்போ இன்னைக்கு இவ்வளவு டெக்னாலஜி வந்தும் கூட நம்மால அப்போதைய தரமான ஓவியங்களைக் கொடுக்க முடியலை. ஆனால் இன்னைக்கு அந்தப் பழமையான ஓவியங்கள் அப்படியே அழகு மாறாமல் இருக்கு. அதுதான் என்னை மண்டலா ஓவியங்கள் கத்துக்க தூண்டிச்சு’. என்னும் கீர்த்தனா இதனை முறைப்படி கத்துக்கொண்டிருக்கிறார்.

‘ நிறைய ஓவிய மையங்களில், தியான பீடங்களில் பார்க்கும் போது இன்னும் வித்யாசமான புள்ளிகள், ரவுண்டுகளைக் கொண்டு வரைஞ்சிருந்தாங்க. அதை மனதை ஒருநிலைப்படுத்தவும், மன அமைதிக்காகவும் பயன்படுத்துவதுண்டு. பொதுவாகவே இந்த வட்டம், வட்டப்புள்ளிகள் மனதை ஒரு நிலைத்தன்மைக்குக் கொண்டு போகும், அமைதிகொடுக்கும். இதனை ஏன் நாம சுவர்களில் ஓவியங்கள் தாங்கிய வட்ட அலங்காரங்கள், கீ-செயின்களில் மாட்டி அடிக்கடி பார்க்கும்போது உடல் மன ரீதியான நிறைய நல்ல விஷயங்களைக் கொடுக்கும். அதனால்தான் இதை ஓவியங்களாக கிராஃப்ட் ஐட்டங்களாக செய்ய ஆரம்பிச்சேன். அதேபோல ஒருசில வண்ணங்களையும் சரியான அளவுகள்ல கொடுத்து சுவர் ஓவியங்கள் மாட்டும்போதும் சில பாசிட்டிவான மனநிலை கொடுக்கும். இதை நீங்க தெரபியாகவும் பயன்படுத்தலாம்’. என்னும் கீர்த்தனா எப்படி இதனை பிஸினஸாக மாற்றினார் மேலும் தொடர்ந்தார்.

‘இந்த ஓவியங்கள் வெறும் ஓவியங்களா மட்டுமே இல்லாம நிச்சயம் மனம் மற்றும் உடல்ரீதியான நிறைய பாசிட்டிவ் விஷயங்களைக் கொடுக்கும்போது ஏன் இதனை பிஸினஸாக மாற்றி பலருடைய வீடுகளுக்கு குறைந்த செலவில் பாசிட்டிவிட்டி கொடுக்கக் கூடாதுன்னு தோணுச்சு.

‘தற்சமயம் இன்ஸ்டாகிராமில் ‘க்விர்க்கி கிரியேஷன்ஸ்’ என்னும் பெயரில் பிஸினஸ் பக்கம் துவங்கி அங்கே என்னுடைய படைப்புகளை விற்பனை செய்கிறேன். கீசெயின்கள் முறையே ரூ.30லிருற்து அலங்காரங்கள் ரூ. 3000 வரையிலும் கூட விற்பனைக்கு இருக்கு. சிலர் மொத்த சுவரும் கூட இந்த மண்டலா டெகரேஷன்களா செய்து வாங்கிக்கறாங்க. பி.இ கம்ப்யூட்டர் சைன்ஸ் படிச்சுட்டு இந்த பிஸினஸான்னு அப்பா, அம்மா திட்டுவாங்களோன்னு நினைச்சேன். ஆனால் சின்ன வயதிலிருந்தே எனக்கு இந்த ஆர்ட்& கிராஃப்ட் மேலே ஆர்வம் இருக்கறது அவங்களுக்குத் தெரியும். அதனாலேயே பெரிதா அவங்க கண்டுக்கலை அல்லது எப்படியும் நான் இந்த பிஸினஸ்தான் செய்வேன் என்னும் மனநிலை இருந்திருக்கலாம். இன்னும் இதனை அடுத்தகட்டத்துக்குக் கொண்டுப் போகணு. மண்டலா ஓவியங்களிலேயே டேபிள்கள், நாற்காலிகள், சோபா கவர்கள், பெட்ஷிட்கள் எல்லாம் திட்டம் இருக்கு. விரைவில் ஆரம்பிப்பேன்’. தன்னம்பிக்கையாகச் சொல்கிறார் கீர்த்தனா.
– ஷாலினி நியூட்டன்

The post மண்டலா ஓவியத்தில் மாஸ் காட்டும் கீர்த்தனா! appeared first on Dinakaran.

Tags : Kirtana ,Dinakaran ,
× RELATED தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை பலி