
*பழைய கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தணும் *அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
கரூர் : கரூர் மாவட்டம் வடகிழக்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் ஆலோசனை மேற்கொண்டார். இதில் மழைநீர் தேங்கும் தாழ்வான பகுதிகளை கண்காணித்து சீரமைக்க வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் வடகிழக்கு பருவமழை 2023 தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான அனைத்துதுறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், கரூர் மாவட்டத்தில் வெள்ளம் ஏற்படக்கூடிய தாழ்வான பகுதிகள் ஓடைகள், குளம் மற்றும் கண்மாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அவற்றின் கரைகளை பலப்படுத்திடவும், பழுது ஏற்பட்டுள்ள மதகுகளை பராமரிப்பு மேற்கொள்ளவும், வெள்ள நீர் பாதுகாப்பாக வடிகால் மூலம் வெளியேற்ற அமைப்புகளை உருவாக்குதல், வெள்ளத்தடுப்புக்காக மணல் மூட்டைகளை தேவையான அளவுக்கு வைத்துக்கொள்ளுதல், பேரிடர் காலங்களில் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் உணவுப்பொருட்கள் உட்பட அத்தியவாசியப்பொருட்களை இருப்பு வைத்திருப்பதை உறுதி செய்திடவும், மேலும் தேவையான மருந்து பொருட்களை இருப்பில் வைத்துக்கொள்ளுதல், வெள்ளம் ஏற்படக்கூடிய பகுதிகளில் உள்ள பொதுமக்களை வெளியேற்றி பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு இடங்ளை தேர்வு செய்துவைத்திடவும், கால்நடைகள் இழப்பீடுகள் ஏற்படாவண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், மண்சுவர் வீடுகளில் வசிப்பவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்திடவும்,போன்றவைகளை தயார் செய்து வைத்துக்கொள்ள துறைசார்ந்த அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
தொடர்ந்து தொற்று நோய் ஏற்படா வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள தேவையான மருத்துவர்கள் மற்றும் மருந்துகள் கையிருப்பில் வைத்துக்கொள்ளுதல், மருத்துவர்களின் எண்ணிக்கையை உறுதி செய்தல், பாதுகாப்பான குடிநீர் வழங்குதல், போக்குவரத்து சரிசெய்தல், வெள்ள நீரை வேளியேற்ற தேவையான ஜெனரேட்டர், மோட்டார் மற்றும் பேரிடர் காலங்களில் தேவைப்படும் ஜேசிபி, ரம்பம், பொக்லைன் இயந்திரங்கள் இருப்பு வைத்துக்கொள்ளவும், மின்தடை ஏற்பட்டால் உடனே சரிசெய்ய ஊழியர்கள் வைத்துக்கொள்ளவும், மின்கம்பங்கள், மின்மாற்றிகளை முன்கூட்டியே தணிக்கை செய்து சரிசெய்திடவும், வெள்ள காலங்களில் ஆற்றில் வரும் கூடுதல் தண்ணீரின் அளவை கண்காணித்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பை தெரியபடுத்துவதுடன் மழை வெள்ள காலங்களில் உதவி தேவைப்படுவோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கிவரும் மாவட்ட பேரிடர் மேலாண்மை அவசர உதவி கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு உதவி மற்றும் தகவல்களை பெற்றுக்கொள்ளலாம் .தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை மழை காலங்களில் மழை வெள்ளம் புயலை நாள் ஏற்படும் பேரிடரிலிருந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்க தேவையான ரப்பர் போட் போதுமான இருப்பு வைத்திருக்க வேண்டும்.
மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மழை மற்றும் வெள்ளக்காலங்களில் ஏற்படும் பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்ளும் வகையில் ஒத்திகை நிகழ்வு நடத்த வேண்டும். பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் உள்ள பழைய கட்டிடங்களை உடனடியாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும். மழை நீர் தேங்கும் தாழ்வான பகுதிகளை கண்காணித்து உடனடியாக சீரமைக்க வேண்டும், அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை வருவாய் துறை அலுவலர்கள் நீர் வளத்துறை அலுவலர்களுடன் இணைந்து ஆக்கிரமிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்டகலெக்டர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்னண், கூட்டுறவு மண்டல இணைபதிவாளர் கந்தராஜா, இணை இயக்குநர் (நலப்பணிகள்),ராமாமணி, துணை இயக்குநர்.(சுகாதாரப்பணிகள்) சந்தோஷ்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தண்டயுதாபாணி, தனித்துணை கலெக்டர் (சபாதி) சைபுதீன், மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா, பேரிடர் மேலாண்மை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறை, பொதுப்பணித்துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post பருவமழை முன்னெச்சரிக்கை ஆலோசனை கூட்டம் தாழ்வான பகுதிகளை சீரமைக்க வேண்டும் appeared first on Dinakaran.