×

திருமலை பிரம்மோற்சவம்.. நான்கு மாட வீதிகளில் உலா வந்த திருத்தேர்.. விண்ணை எட்டிய கோவிந்தா முழக்கம்

திருப்பதி :திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மகா ரதத்தில் எழுந்தருளி அருள் பாலித்த மலையப்ப சுவாமியை பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி முழக்கத்துடன் வழிபட்டனர். திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பிரமோற்சவத்தை முன்னிட்டு தினந்தோறும் காலை மற்றும் இரவில் பெரிய சேஷம், சின்ன சேஷம் அண்ண பறவை, முத்து பந்தல், சர்வ பூபாளம், மோகினி அவதாரம், கருட வாகனம் என பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி ஸ்ரீதேவி, பூதேவி சம்மேத மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். பிரமோற்சவத்தின் 8ம் நாளான இன்று காலை மகா ரதம் எனப்படும் தேரோட்டம் நடைபெற்றது.

காலை 7 மணி முதல் 9.30 மணி வரை நடைபெறும் விழாவில் பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று பக்தி முழக்கத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர். 4 மாட வீதி வழியாக ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ரத உற்சவத்தின் போது, நடைபெற்ற பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் பக்தர்களை பரவசம் அடைய செய்தது.இதனைத் தொடர்ந்து இன்று இரவு 8 மணிக்கு கல்கி அலங்காரத்தில் எழுந்தருளும் மலையப்ப சாமி குதிரை வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அதாவது தீய சக்திகளை வதம் செய்வதற்காக பாயும் தங்க குதிரை மீது மலையப்ப சாமி காட்சி தருகிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

The post திருமலை பிரம்மோற்சவம்.. நான்கு மாட வீதிகளில் உலா வந்த திருத்தேர்.. விண்ணை எட்டிய கோவிந்தா முழக்கம் appeared first on Dinakaran.

Tags : Tirumala Brahmotsavam ,Govinda ,Tirupati ,Malayappa Swami ,Maha Ratha ,Malayan Temple ,
× RELATED கோவிந்தா! கோவிந்தா! கோஷத்துடன்...