×

பூண்டி ஏரியில் இருந்து 1000 கனஅடி உபரி நீர் இன்று திறப்பு: கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!

திருவள்ளூர்: பூண்டி ஏரியில் இருந்து 1000 கனஅடி உபரி நீர் திறக்கப்பட உள்ளதால் கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கனஅடியில் நீர் இருப்பு 2792 மில்லியன் கனஅடியாக உள்ளது. பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 1,520 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. பூண்டி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை அவ்வப்போது பெய்து வருவதால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. பூண்டி அணையின் மொத்த உயரமான 35 அடியில் நீர்மட்டம் 33.90 அடியாக உள்ளது.

இன்று மாலை 4 மணி அளவில் பூண்டி ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்படுகிறது. அதன்படி, பூண்டி ஏரியில் இருந்து 1,000 கனஅடி உபரி நீர் இன்று மாலை திறக்கப்பட உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்படும் உபரிநீர் எண்ணூர் சென்று வங்கக்கடலில் கலக்கும். இதனால் கொசஸ்தலை ஆற்றங்கரையோரம் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நம்பாக்கம் கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, எறையூர், பீமன் தோப்பு, சோமதேவன்பட்டு, நெய்யூர், தாமரைப்பாக்கம், திருகண்டலம், ஆத்தூர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பூண்டி ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் உபரிநீர் திறப்பு மேலும் அதிகரிக்கவும் வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பூண்டி ஏரியில் இருந்து 1000 கனஅடி உபரி நீர் இன்று திறப்பு: கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!! appeared first on Dinakaran.

Tags : Lake Bundi ,mosesta ,Thiruvallur ,Lake Poondi ,Dinakaran ,
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்