×

கங்கை நதிக்கு நிகராக புனிதமாக கருதப்படும் நிட்சேபநதி கழிவுநீர் கால்வாயாக மாறிவரும் அவலம் 1.50 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுவதில் சிக்கல்

சங்கரன்கோவில்,செப்.25: கங்கைக்கு நிகராக புனிதமாக கருதப்படும் நிட்சேப நதியில் நீர்வரத்து இல்லாததால் கழிவு நீர் கால்வாயாக மாறி வருகிறது. இதனால் 1.50 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. செண்பகவல்லி அணை சீர் செய்யப்பட்டால் தான் நீர்வரத்து சீராகும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் நதியாக தென்காசி மாவட்டத்தில் நிட்சேப நதி இருந்து வந்தது. மேற்குத்தொடர்ச்சியின் மலையில் உருவாகும் இந்த நதி, காசிக்கு நிகராக புனித நதியாக இருந்து வருகிறது. மகாத்மா காந்தியின் அஸ்தியை கரைத்த ஏழு இடங்களில் கரிவலம்வந்தநல்லூர் நிட்சேப நதியும் ஒன்று. 1948ல் மகாத்மா காந்தியின் அஸ்தி நிட்சேப நதியில் கரைக்கப்பட்டுள்ளது. அதற்கான நினைவு சின்னத்தை 1957ம் ஆண்டு வினோபாஜியால் வைக்கப்பட்டது.

அதற்கான கல்வெட்டும் இங்கு அமைந்து இருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் உருவாகும் தண்ணீர், நிட்சேப நதியை கடந்து வைப்பாறை அடைந்து கடலில் கலக்கும். ஒன்றரை லட்சத்திற்கும் மேலான ஏக்கர் விவசாய நிலங்களை செழிக்க செய்த நிட்சேப நதியின் இன்றைய நிலை கருவேலி மரங்களுடன், கழிவுநீர் கால்வாயாக அழிவின் விளிம்பில் இருந்து வருகிறது. செண்பகவல்லி அணை உடைந்த பிறகு நிட்சேப நதியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தண்ணீர் வரத்து இல்லாமல் உள்ளது. தமிழக – கேரள எல்லையில் உள்ள செண்பகவல்லி அணைக்கட்டு உடைந்து 60 ஆண்டுகளாகியும், இதுவரை சீரமைக்கப்படாமல் உள்ளதால் இப்பகுதி விவசாயிகள் பாசன வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

காமராஜர் ஆட்சிக்காலத்தில் செண்பகவல்லி அணை சீர்செய்யப்பட்ட நிலையில், மீண்டும் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அதனால் தமிழகப் பகுதிக்கு நீர்வரத்து முழுமையாக நிறுத்தப்பட்டதால், பாசன நிலங்கள் பாதிப்படைந்துள்ளதாகவும் இதனால் மூன்று மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

நீர்வரத்து இல்லாததால் தீர்த்தவாரி நடத்துவதில் சிக்கல்
சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்த நல்லூரில் உள்ள பால்வண்ணநாதர் கோயில் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் நடக்கக்கூடிய தீர்த்தவாரி திருவிழாவும் ஆற்றில் தண்ணீர் இல்லாததால் பல ஆண்டுகளாக நடைபெறவில்லை. இதனால் பக்தர்கள் வேதனையுடன் உள்ளனர்.

The post கங்கை நதிக்கு நிகராக புனிதமாக கருதப்படும் நிட்சேபநதி கழிவுநீர் கால்வாயாக மாறிவரும் அவலம் 1.50 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுவதில் சிக்கல் appeared first on Dinakaran.

Tags : Nitshepa river ,Ganga ,Sankarankoil ,Nitsepa river ,Nitsepanadi ,Ganges ,Dinakaran ,
× RELATED புராதன சின்னங்களை பாதுகாப்பது இந்திய...