×

400 விநாயகர் சிலைகள் கரைப்பு

ஓசூர், செப்.25: ஓசூரில் 400க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. இதையொட்டி, சேலம் சரக டிஐஜி தலைமையில் 1400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் வடமாநிலங்களை போலவே, விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நேற்று இந்து அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் வைக்கப்பட்டிருந்த 400க்கும் மேற்பட்ட சிலைகள், ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட்டன. நகர பகுதியில் நடந்த இந்த ஊர்வலத்தை காண, பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கூடினர். விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி, போலீசார் போக்குவரத்தை மாற்றி அமைத்தனர். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊர்வலம் நடந்த பகுதிகளில், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சிலைகள் கரைக்கப்பட்ட பின்னர், மின் இணைப்பு வழங்கப்பட்டது.

விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் கரைப்பின் போது, அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க, சேலம் சரக டிஐஜி தலைமையில் எஸ்பி, ஏடிஎஸ்பி, டிஎஸ்பி உள்ளிட்ட 1400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நகர பகுதியில் இருந்த மசூதிகள், தேவாலயங்கள் முன்பு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நகர சுற்றுவட்டார பகுதிகளில் இருந்த 8 மதுபான கடைகள் மூடப்பட்டிருந்தன. பஞ்சமுகி விநாயகர், கேதர்நாத், போலீஸ் விநாயகர், பால விநாயகர், ராஜா விநாயகர், பாலபூர் விநாயகர், வரசித்தி விநாயகர், போதிமர விநாயகர் என பல்வேறு வடிவங்களில் அமைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் அனைத்தும், நேற்று ெகலவரப்பள்ளி அணை, ராமநாயக்கன் ஏரி, தர்கா ஏரி உள்ளிட்ட பகுதிகளிலும், அந்தந்த பகுதிகளில் உள்ள நீர் நிலைகளிலும் கரைக்கப்பட்டன. சிலை ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் அம்மன் வேடமணிந்து கலந்து கொண்டனர்.

The post 400 விநாயகர் சிலைகள் கரைப்பு appeared first on Dinakaran.

Tags : Dieger ,Osur ,Salem ,Vieger ,
× RELATED ஒசூர் அருகே யானை தாக்கி உயிரிழந்த 2...