×

புரட்டாசி மாதப்பிறப்பு மார்க்கெட்டில் மீன்கள் விலை குறைந்தது

 

ஈரோடு, செப். 25: புரட்டாசி மாத பிறப்பையொட்டி, ஈரோடு மார்க்கெட்டில் மீன்கள் விலை குறைந்தது. ஈரோடு டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டில் 30க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு கடல் மீன்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. திருச்செந்தூர், நாகப்பட்டினம், காரைக்கால், தூத்துக்குடி மற்றும் கேரள மாநிலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிக அளவில் கடல் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. கடந்த வாரம் வரை மீன்கள் விற்பனை அமோகமாக இருந்தது. ஆனால் தற்போது புரட்டாசி மாதப் பிறப்பையொட்டி, விரதம் காரணமாக பெரும்பாலானோர் சைவம் சாப்பிடுவதால் இந்த வாரம் மீன் மார்க்கெட், இறைச்சிக் கடைகளில் வியாபாரம் வெகுவாக குறைந்தது.

அந்த அடிப்படையில், நேற்று மீன் மார்கெட்டுக்கு 12 டன் மீன்கள் மட்டுமே வரத்தாகி இருந்தன. இதனால் கடந்த வாரத்தைவிட இந்த வாரம் மீன்களின் விலை ரூ.100 முதல் ரூ. 300 வரை குறைந்தது. கடந்த வாரங்களில் கிலோ ரூ.1,000க்கு விற்கப்பட்ட வஞ்சிர மீன் நேற்று ரூ.700ஆக குறைந்து விற்பனையானது. இதேபோல ரூ. 750க்கு விற்பனையான விளா மீன் ரூ.450ஆக குறைந்து விற்பனையானது. ரூ.250க்கு விற்கப்பட்ட அயிலை ரூ. 200க்கும், ரூ.500க்கு விற்பனையான தேங்காய் பாறை மீன் ரூ. 450க்கும், ரூ. 900க்கு விற்பனையான வெள்ளை வாவல் ரூ. 450க்கும், ரூ.700க்கு விற்கப்பட்ட கருப்பு வாவல் ரூ.500க்கும், ரூ.700க்கு விற்கப்பட்ட கடல் இறால் ரூ.600க்கும் என விலை குறைந்து விற்பனையானது.

மீன் மார்க்கெட்டில் நேற்று விற்பனையான மீன்களின் விலை (கிலோவில்) வருமாறு: சங்கரா ரூ.300, சீலா ரூ. 450, நண்டு ரூ.300, உளி மீன் ரூ.400, கடல் அவுரி ரூ.400, மத்தி மீன் ரூ.150, கொடுவா ரூ.400, முரல் ரூ.250, பாறை ரூ.400, திருக்கை ரூ.300, நகர மீன் ரூ.400. இதேபோல, ஆடு, கோழி இறைச்சிக் கடைகளிலும் வியாபாரம் பெருமளவில் குறைந்தே காணப்பட்டது. பிராய்லர் கோழி கடந்த வாரம் கிலோ ரூ. 240க்கு விற்பனையான நிலையில் நேற்று ரூ.40 குறைந்து ரூ.180க்கு விற்பனையானது. ஆட்டு இறைச்சி கிலோ ரூ.700க்கும், நாட்டுக்கோழி கிலோ ரூ.600க்கும் விற்பனையானது.

The post புரட்டாசி மாதப்பிறப்பு மார்க்கெட்டில் மீன்கள் விலை குறைந்தது appeared first on Dinakaran.

Tags : Puratasi ,Erode ,Erode Donny ,Bridge… ,Dinakaran ,
× RELATED ஈரோடு அருகே விவசாய நிலத்தில்...