×

பெருந்துறை சிப்காட் வளாகத்தில் 2,500 மரக்கன்றுகள் நடும் பணிகளை ஈரோடு கலெக்டர் துவக்கி வைத்தார்

 

ஈரோடு, செப்.25: பசுமை தமிழக தினத்தையொட்டி பெருந்துறை சிப்காட் வளாகத்தில் 2,500 மரக்கன்றுகள் நடும் பணிகளை ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா துவக்கி வைத்தார். தமிழ்நாட்டில் வனப்பரப்பை 23.27 சதவீதத்தில் இருந்து 33 சதவீதமாக உயர்த்த பசுமை தமிழ்நாடு இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்நிலையில், பசுமை தமிழ்நாடு தினமான நேற்று ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்து, மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

இதைத்தொடர்ந்து, கல்லூரி மாணவ-மாணவிகள், தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டு 2,500 மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் வருவாய்த்துறை, வனத்துறை, தோட்டக்கலைத்துறை, நெடுஞ்சாலைத்துறை, வேளாண்மை-உழவர் நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்பில் வேம்பு, மலைவேம்பு, பூவரசு, புங்கன், நாவல், இலுப்பை, வாகை, நீர் மருது, தேக்கு என 20 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, உதவி கலெக்டர்(பயிற்சி) வினய்குமார் மீனா, வன விரிவாக்க அலுவலர் மணிவண்ணன், சிப்காட் உதவி செயற்பொறியாளர் சுஜா, கல்லூரி மாணவ-மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பெருந்துறை சிப்காட் வளாகத்தில் 2,500 மரக்கன்றுகள் நடும் பணிகளை ஈரோடு கலெக்டர் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Erode Collector ,Perundurai Chipkot ,Erode ,Green Tamil Nadu Day ,Perundurai Chipkot Complex ,Dinakaran ,
× RELATED 7140 தபால் வாக்குச்சீட்டுகள் இருப்பு வைப்பு