×

எம்.பி. தேர்தல் குறித்து தாமரைக்கு தண்ணி காட்டிய மாஜி அமைச்சரை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

‘‘இலை கட்சி கூட்டம் நடைபெறும் சூழலில் மாஜி அமைச்சரின் பேச்சு தாமரை தரப்பை சூடாக்கி உள்ளதாமே, என்ன காரணம்…’’ என்று விசாரித்தார் பீட்டர் மாமா.
‘‘இலை கட்சியில் மாஜி அமைச்சரின் பேச்சால் தொண்டர்கள், கூட்டணி கட்சியினர் அதிருப்தியில் இருக்கிறார்களாம். குறிப்பாக ‘புரம்’ என்று முடியும் மாவட்டத்தில் மாஜி அமைச்சர், பொதுக்கூட்டத்தில் பங்கேற்று இலை கட்சியினரை உசுப்பேற்றும் வகையில் பேசினாராம். அவரின் இந்த பேச்சு அந்த மாவட்டத்தில் உள்ள தாமரை தரப்பினரை சூடேற்றிவிட்டதாம். அவரது பேச்சில், தாமரை தலைவர் ‘மவுன்டனை’ கடுமையாக விமர்சித்தாராம். அதில் பல அச்சில் ஏற்ற முடியாதவை. எனினும், கடைசியில் பாயின்ட் பிடித்து பேசிய ‘புரம்’ மாவட்ட மாஜி அமைச்சர், ‘எங்களுக்கு மக்களவை தேர்தல் பொருட்டல்ல, நாங்கள் அங்கு செல்லவும் மாட்டோம். 2026 சட்டசபை தேர்தல்தான் எங்களுக்கு இலக்கு. யாரும் பிரதமராக போவதில்லை.

அதனால் அந்த தேர்தல் பற்றிய கவலை எங்களுக்கு இல்லை. எங்கள் பயணம் சட்டமன்ற தேர்தலை நோக்கி சென்று கொண்டு சென்று கொண்டிருக்கிறது பொதுக்கூட்டத்தில் இலை கட்சியின் நிலையை ‘ஓப்பனாக’ பேசினாராம். இதனால் அங்கிருந்த நிர்வாகிகள், தொண்டர்கள், வரும் மக்களவை தேர்தலுக்கு நாம் கட்சி பணி ஆற்ற வேண்டுமா?. வேண்டாமா என்ற குழப்பத்தை மாஜி அமைச்சர் ஏற்படுத்தி விட்டதாக புலம்பினாங்களாம். அதற்க மாஜி அமைச்சருடன் வந்தவர்கள், கொடுப்பதை வாங்கிக் கொண்டு அவங்க வேலையை பாருங்க… நம்ம கட்சி நிற்கிற இடத்துல மட்டும் தேர்தல் களம் சூடாக இருக்க வேண்டும்… தாமரை போட்டியிடும இடத்தில் ‘கூலாக’ இருந்தா போதும் என்று சொன்னார்களாம். இதனால ‘புரம்’ என்று முடியும் மாவட்டத்தில் உள்ள இலை கட்சியினர் சந்தோஷத்துல இருக்காங்களாம்.

செய்யாத வேலைக்கு கூலி கொடுக்கும்போது ஏன் வேண்டாம்னு சொல்லணும்னு சந்தோஷத்தில் மிதக்கிறாங்களாம். ஆனால், மாஜி அமைச்சரின் இந்த பேச்சு தாமரை கட்சிக்கும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறதாம். இந்நிலையில் மாலை 6 மணிக்கு மேல் மாஜி அமைச்சர் ஒரு மாதிரியாக பேசுவார் என்று தாமரை தலைவர் மவுன்டன் சொன்னதை சுட்டிகாட்டி, ‘புரம்’ மாவட்டத்தை சார்ந்த மாஜி அமைச்சரின் பேச்சை பெரிதாக எடுத்து கொள்ள வேண்டாம், விட்டுத்தள்ளுங்க என்ற தாமரை கட்சியின் சில நிர்வாகிகள் கமென்ட் அடித்து இருக்கிறார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ சொந்த கட்சிக்காரரை ஏமாற்றிய தலைவரை பற்றி சொல்லுங்களேன்…’’ என்று சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா.
‘‘ கூட்டணி குறித்து ஏதாவது பேசி அது சர்ச்சையாக வளரவிடக்கூடாது என்பதற்காகவே சேலம்காரர் வாய் திறக்க மறுத்துட்டாராம். இலை-தாமரை ரிலேஷன்ஷிப் நீடிக்குமா என்பது கட்சி நிர்வாகிகளிடமும் மில்லியன் டாலர் கேள்வியாக உலா வந்து கொண்டுள்ளதாம். இலையின் இரண்டாம் கட்ட தலைகள், தாமரையை இறங்கி அடிச்சு தொங்கவிடுவதை கேட்டும், பார்த்தும் சேலத்துக்காரர் ரொம்ப ரசிக்கிறாராம். ஆனால், தான் எந்த நிலையிலும் வாய் திறந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாராம். இரண்டு நாளைக்கு முன்னாடி சொந்த ஊரில் அவங்க கட்சி எம்எல்ஏ ஏற்பாடு செய்த நலத்திட்ட பணிகள் விழாவில் சேலத்துக்காரரு கலந்து கிட்டாராம்.

மைக் டைசனும், விழுப்புரத்துகாரரும் வாய் திறந்து பரபரப்பு தொற்றியிருந்த நிலையில் அந்த கூட்டத்தில் பங்கேற்க அவரு வந்தாராம். இதனால் தலைவரு நிச்சயம் மைக்கை பிடிச்சு தாமரைக்கு செமையாக பதிலடி கொடுப்பாருன்னு இலை கட்சியினர் நினைச்சாங்களாம். ஆனால் சேலத்துக்காரரோ இத்தனை கோடிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறோம் என்று மட்டும் கூறி விட்டு மைக்கை கீழே வச்சிட்டாராம்… ஆனால் மற்றவர்கள் ‘மவுன்டன்’, தாமரையை கிழித்து தொங்கவிடுவதை பார்த்து ரசித்துவிட்டு, அவர்களை தனியாக அழைத்து பாராட்டுகிறாராம். இன்னைக்கு மீட்டிங்கல தாமரையை அடிச்சு நொறுக்கிட்டீங்க… நீங்க பேசும்போது கட்சியினர் ஆர்ப்பரித்தனர் என்று சொல்லி சிரிக்கிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அரசு அதிகாரிக்கு எதிராக மல்லு கட்டுவது எந்த கட்சி தலைவரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘குமரி மாவட்டத்தில் உள்ள ஒன்றிய தலைவராக இருப்பவர் தாமரை கட்சியை சேர்ந்தவராம். கட்சி தயவில் பதவிக்கு வந்த இவர் கட்சிக்காரர் ஒருவரிடமே பணம் வாங்கி அவரது மகனை வேலைக்கு அமர்த்தினாராம். இப்படி தனது தலைமையில் வேலைக்கு அமர்த்தியவர்களிடம் பல லட்சம் வரை அவர் வசூல் செய்துள்ளாராம். தற்போது வந்துள்ள அதிகாரிக்கு ஒத்துப் போகவில்லையாம். கடமையே கண்ணியம் என அதிகாரி இருப்பதால் கட்சி காரர்கள் உதவியுடன் அதிகாரியை பணியிட மாற்றம் செய்யும் வேலையில் இறங்கினாராம். கட்சிக்காரரை வைத்தே புகார் மனு கொடுத்து அந்த அதிகாரிக்கு இடமாற்றமும் வந்து விட்டது. ஆனால் நேர்மையான அதிகாரியை விட்டுவிட மனம் இல்லாத ஊராட்சி தலைவர்கள் கலெக்டரிடம் கோரிக்கை வைத்து பணியிட மாற்றத்தை திரும்பப் பெற வைத்து விட்டனராம். இதனால் கடுப்பான தாமரை தலைவி உன்னை டிரான்ஸ்பர் செய்யாமல் இனி பிடிஓ அலுவலகத்திற்கே வர மாட்டேன் என கூறிவிட்டு ஒரு மாதத்துக்கு முன்பாக கோபத்துடன் போனாராம். இதுவரை வரவில்லையாம்.

நேர்மையான அதிகாரி இருக்க இருக்க வசூல் குறையும் என்பதை கணக்கு போட்ட தாமரை தலைவி அதிகாரி மீது அவதூறு பரப்ப முடிவு செய்துள்ளார். தனக்கு தோதான ஒருவரை பிடித்துக் கொண்டு அதிகாரி மீது அவதூறு போஸ்டர்களை ஒட்டி உள்ளனர். எங்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்னு சொன்னாங்களாம். தாமரை தலைவியின் தில்லாலங்கடி வேலைக்கு துணையாக இருந்த அந்த நபரின் பெயரையும் குறிப்பிட்டே உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் பறந்துள்ளன. போஸ்டர்கள் ஒட்டப்பட்ட இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் கைப்பற்றி உள்ளனராம். ஒட்டியவர்கள் சிக்கினால் நமக்கு பிடி இறுகுமோ என கலக்கத்தில் தாமரை தலைவி இருப்பதாக தாமரை வட்டாரங்களே கூறுகின்றன…’’ என்றார் விக்கியானந்தா.

The post எம்.பி. தேர்தல் குறித்து தாமரைக்கு தண்ணி காட்டிய மாஜி அமைச்சரை பற்றி சொல்கிறார் wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : MM GP ,maji minister ,Leaf Party ,M. GP ,Yananda ,
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...